சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். இலங்கையைச் சேர்ந்த சிங்களக் கடற்படையினர் அந்த மீன்பிடி படகினை தாக்கி புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரணை நடுக்கடலில் மூழ்கடித்துப் படுகொலை செய்தனர். இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் நிகழ்த்திய இந்தப் படுகொலை பெரும் கொந்தளிப்பை உலகத் தமிழர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இரு நாட்களுக்கு முன் வெளியிட்டத் தன் கண்டன அறிக்கையில், மீனவர் ராஜ்கிரண் நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம் என்றும் கச்சத்தீவு இலங்கை அரசுக்குத் தாரை வார்க்கப்பட்டதிலிருந்தே தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்படுவதும், கொடூரமாகத் தாக்கப்படுவதும் அவர்களின் படகுகள், உடமைகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர் நிகழ்வாகி வருவதாகவும் குற்றம் சாட்டித் தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் மீனவர் ராஜ்கிரணின் படுகொலையைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஹுமாயூன் கபீர் கலந்து கொண்டதோடு கொலை செய்யப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் நேற்று, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மீனவர் படுகொலை செய்யப்பட்டதற்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய்களையும் அறிவித்தார்.

இப்படி மீனவர் ராஜ்கிரண் படுகொலை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று காலை முதல், டிவிட்டரில் #ArrestSLNavy என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது. அதில் மீனவர் ராஜ்கிரண் இலங்கைக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், படுகொலை செய்த இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்யக் கோரியும் உலகெங்கிலும் உள்ளத் தமிழர்கள் தங்கள் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர் நிகழ்வாகி வரும் மீனவர் படுகொலை குறித்து இந்திய ஒன்றிய அரசு பாராமுகம் காட்டுவதாகவும், தொடர்ந்து இலங்கை நட்பு நாடு எனச் சொல்லி இந்திய அரசு தமிழர்களை வஞ்சிப்பதாகவும் அந்த ஹேஷ் டேக்கில் உலகத் தமிழர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
























