ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் தற்போது வரை 12 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்ச்சமூகம் உலகின் தொல்குடிகளில் ஒன்று என்பதும் தமிழ் மொழிதான் உலகின் மூத்த மொழி என்பதும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வருகின்றன. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கொடுமணல், கீழடி போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் பல உண்மைகளை வெளியே கொண்டு வந்தன. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் அக்டோபர் 10ம் தேதி தொடங்கியது.

மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் இந்த அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்பொருட்டு ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் 12 குழிகள் வெட்டப்பட்டு அகழாய்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த அகழாய்வு பணிகள் மூலம் தற்போது வரையிலும் 12 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், சங்க காலத்தைய மக்களின் வாழ்விடப்பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
























