இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் ட்விட்டர் பதிவை பலரும் வசைபாடி அவரை இணையத்தில் வறுத்தெடுத்துவருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ’விடுதலை பாகம்-1’. சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் காவலர்களின் அட்டூழியங்களையும், அதை எதிர்த்துப் போராடும் மக்கள் நல அமைப்பினரின் போராட்டங்களையும் விவரிக்கிறது.
’விடுதலை பாகம்-1’ திரைப்படம் பலதரப்பு மக்களிடையேயும் பெரும் பாராட்டுகளை அள்ளிவருகிறது. தனது முந்தைய படங்கள் போலவே இந்தப் படத்தையும் உயிரோட்டத்துடன் இயக்கி வெற்றிமாறன் தனது 6வது வெற்றியை தமிழ் சினிமாவில் பதிவுசெய்துள்ளார். இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவந்த சூரி இதில் இதுவரை வெளிப்படுத்தாத புதியவகை நடிப்பைக் காட்டி மிரட்டியுள்ளதாக படம் பார்த்தவர்கள் பாராட்டிவருகின்றனர். விடுதலை படத்திற்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் தங்களது பாராட்டுகளை வலைதளங்கலில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ’கோமாளி’, ’லவ் டுடே’ படங்கள் மூலம் பிரபலமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விடுதலை படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”விடுதலை படம் மிகவும் அருமையாக உள்ளது. இயக்குநர் வெற்றிமாறனுக்கும் அவரது குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுதான் வெற்றிமாறன் ரசிகர்களைக் கடுப்பில் கொந்தளிக்கச் செய்துள்ளது.
தனது பதிவில் வெற்றிமாறனை ஒருமையில் பெயரிட்டு பிரதீப் ரங்கநாதன் பதிவிட்டுள்ளது பலரை கோபமடையச் செய்துள்ளது. தனது பதிவில் அவர் வெற்றிமாறன் சார் என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும், தனிப்பட்ட முறையில் எப்படி அழைத்தாலும் பொதுவெளியில் ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குநரை இப்படி ஒருமையில் அழைக்கக்கூடாது என்றும், 2 வெற்றிப்படங்கள் கொடுத்துவிட்டால் பெரிய இயக்குநர் என்ற திமிர் வந்துவிடுமா? என்றும் சகட்டுமேனிக்கு பிரதீப் ரங்கநாதனை இணையவாசிகள் கருத்துகளால் ஏகத்துக்கும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
பிரதீப் ரங்கநாதன் சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. அண்மையில் அவரது ’லவ் டுடே’ படத்தில் யுவனை இசையமைப்பாளராக அவர் பணிபுரிய வைத்திருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னதாக அதே யுவனின் இசையை குறித்து கிண்டலாக அவர் பதிவிட்டதை தூசு தட்டி எடுத்து இணையத்தில் அவரை நெட்டிசன்கள் கடைந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.


























