ஷர்மிளா என்ற இளம்பெண் கோவை மாவட்டத்தின் முதல் பேருந்து ஓட்டுநராகப் பொறுப்பேற்று பலரது கவனத்தையும் ஈர்த்துவருகிறார்.
நம் ஊரில் ஆண்களின் வேலை இது, பெண்களின் வேலை இது என்று காலம்காலமாக நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டு மூளையில் பதியவைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே பாலின எல்லைகளைக் கடந்து திறமையும் ஆர்வமும் இருக்கும் ஆண்களும், பெண்களும், ’நீ இதெல்லாம் செய்யக்கூடாது’ என்று கற்பிக்கப்பட்ட பல விஷயங்களையும் உடைத்தெரிந்து தங்களை நிரூபித்துவருகின்றனர். அந்த வகையில், முதல் பெண் பேருந்து ஓட்டுநராக பொறுப்பேற்று கோவையைக் கலக்கிவரும் ஷர்மிளா பலரது கவனத்தையும் தற்சமயம் ஈர்த்துவருகிறார்.
கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான ஷர்மிளா, அடிப்படையில் ஒரு ஃபார்மஸி மாணவி. டிப்ளமோ இன் ஃபார்மஸி பட்டதாரியான ஷர்மிளா வாகனம் இயக்குவதில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து தான் படித்த துறையை விடுத்து டிரைவிங்கில் கவனம் செலுத்திய அவர் முறையாக அதைக் கற்று அதற்கான உரிமத்தையும் பெற்றுள்ளார்.
பேருந்து ஓட்டுநராவதை லட்சியமாகக் கொண்டு இயங்கிவந்த ஷர்மிளா, தனது தந்தையின் ஆட்டோவை இயக்கி இதற்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளார். பின் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்றில் தனது கனவான ஓட்டுநர் பணியில் சேர்ந்து தற்சமயம் கோவையைக் கலக்கிவருகிறார்.
கோவையின் காந்திபுரம் முதல் சோமனூர் வரையான வழித்தடத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவரும் ஷர்மிளாவை பயணிகள் வியப்புடன் பார்த்து அவரைப் பாராட்டியும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டும் மகிழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள ஷர்மிளா, ”கோவையின் முதல் பெண் ஓட்டுநரகாக வேண்டும் என்ற என்னுடைய கனவு நனவாகியுள்ளது. நான் 7ம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே எனக்கு டிரைவிங் மீது அதிக ஆர்வம் இருந்தது. எனது கனவை பெற்றோர் நிறைவேற்றியுள்ளனர். வாகன ஓட்டுநர்கள் என்றாலே ஆண்கள் தான் பணிபுரியமுடியும் என்பதை மாற்றி ஒரு பெண்ணாக இப்பணியை செய்வதை பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். பலரும் என்னை வியப்புடன் பார்த்து வாழ்த்துகின்றனர். நான் எந்தச் சிரமமும் இல்லாமல் இந்தப் பணியைச் செய்துவருகிறேன்” என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.


























