ஹரியானாவில் பெற்ற மகன் தங்களை சரியாக கவனித்துக்கொள்ளாத விரக்தியில் முதிய தம்பதியர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஜகதீஷ் சந்திர ஆர்யா(78) – பாக்லி தேவி(77) ஆகியோர் ஹரியானாவின் சர்க்கி தாத்ரியில் உள்ள பத்ராவின் ஷிவ் காலனி பகுதியில் வசித்துவருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டில் கடந்த மார்ச் 29ம் தேதி யாருமில்லாத சமயம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். விஷம் அருந்துவதற்கு முன்னதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த அந்த தம்பதிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தற்கொலைக்கு முன்னதாக ஜெகதீஷ் சந்திரா ஆர்யா எழுதிய தற்கொலைக் கடிதத்தில், 30 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் தனது மகன், தங்களுக்கு இரண்டு வேளை உணவு கூட தர மறுத்துவிட்டதாகவும், உடல்நிலை சரியில்லாத தங்களை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்றும் அவர் எழுதியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 30 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் தங்களது மகனுடன் அவர்கள் தங்கிய நிலையிலும், அவர்களுக்கு பழைய உணவே வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஜகதீஷ் எழுதிய கடிதத்தில், “என் மனைவி முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், நாங்கள் எங்களின் இன்னொரு மகன் வீரேந்தருடன் வாழத் தொடங்கினோம். ஆனால் அவர் எங்களுக்கு எஞ்சிய உணவையே உண்ணக் கொடுத்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனைவியின் நோய்த்தாக்குதலுக்கு அவரது சொந்த குடும்பத்தினர் அளித்த சிகிச்சை போதுமானதாக இல்லை என்று கருதிய ஜகதீஷ் – பாக்லி தேவி தம்பதி இனியும் வாழவேண்டாம் என்று விரக்தியில் தங்கள் வாழ்க்கையை முடிக்க முடிவு செய்துள்ளனர். தங்களது தற்கொலைக் கடிதத்தில், தனது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மருமகள்கள் தான் தங்களது மரணத்திற்கு காரணம் என்று எழுதியுள்ளனர்.
தற்சமயம், ஜகதீஷ் தனது பெயரில் விட்டுச் சென்ற சொத்துக்களை பத்ராவில் உள்ள ஆர்ய சமாஜ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்றும், இந்தக் கொடுமைக்கு காரணமான குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனது பெற்றோர் நோய் காரணமாக சிரமப்பட்டதாகவும் அதனால்தான் தாங்கள் இவ்வாறு நடந்துகொண்டதாகவும், ஜகதீஷின் மகன் வீரேந்தர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. எனினும், போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தற்கொலைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


























