வியர்வைத் துளிகள் எரிபொருளாகட்டும்-கட்சி தொண்டர்ளுக்கு தமிமுன் அன்சாரி கடிதம்…!
சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்ற முப்பெரும் கொள்கைகளுடன் இயங்கும் மனிதநேய ஜனநாயக கட்சி தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாக செயல்பட வேண்டும் என அக்கட்சி தொண்டர்களுக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்
ஒய்வற்ற பணிகளுக்கு ஊடாக இக்கடிதம் வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்கிறோம்.
மனிதநேய சொந்தங்களை சந்திக்கும் போதும், தொடர்புக்கொள்ளும்போதும் கிடைக்கும் உற்சாகத்திற்கு அளவே இல்லை.
கட்சிப் பணிகளில் இந்த பாசப்பிணைப்புதான் நம்மை வலிமைப்படுத்துகிறது, மெருகூட்டுகிறது. இது தானே உண்மை…?
சொந்தங்களே…
ஈராண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த 8 மாதங்களாக கட்சியின் செயல்பாடுகள் மீண்டும் எழுச்சிப் பெற்றுள்ளது.
அரசியல் வட்டாரத்தின் கூரிய பார்வை நம் பக்கம் திரும்பியுள்ளது.
ஊடகங்கள் நம் பணிகளை முன்னிலைப்படுத்துகின்றன.
மக்கள் ஆதரவு பெருகியுள்ளது.
இவையாவும் மேலும், மேலும் நம்மை மக்களுக்காக பணியாற்ற தூண்டுகின்றன.
நமது பணிகள் பலராலும் ஆச்சரியத்தோடு வரவேற்கப்படுகின்றன.
இவற்றை அறிந்து பூரிப்படைந்து, பேசிக்கொள்வது மகிழ்ச்சியை தரும். ஆனால் வளர்ச்சியை தராது.
பெருகியிருக்கும் ஆதரவை களத்தில் வென்றெடுப்பதே அரசியல் ஆற்றலாகும்.
இதில் பேரனுபவம் பெற்ற நீங்கள் அனைவரும் கீழ்க்கண்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டுகிறோம்.
▪️ அரசியல் ஆர்வலர்களை சந்தித்து நம் கட்சிக்கு அழைத்தல்
▪️ 18 வயது நிரம்பிய புதிய வாக்களர்களை கட்சியில் இணைத்தல்
▪️ மாற்று கட்சிகளிலிருந்து வருபவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்
▪️ புதிய கிளைகளை உருவாக்க பயணங்களை மேற்கொள்ளுதல்
▪️ஒன்றிய, மாவட்ட அளவில் செயல் வீரர் கூட்டங்களை நடத்துதல்
▪️தொகுதிவாரியாக ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்
▪️மண்டல / மாவட்ட வாரியாக அரசியல் பயிலரங்குகளை நடத்துதல்
என தீவிரமான செயல்பாடுகளும், கள உழைப்புகளும் அவசியமாகிறது.
நம் முன்னெடுப்புகள் மூலம், மஜகவின் அரசியல் தமிழ்நாட்டிற்கு அவசியமானது என்பதை நிரூபித்துவிட்டோம்.
அயராத உழைப்பை கொட்டி , நம் உள் கட்டமைப்பு எவ்வளவு ஆழமானது என்பதையும் உறுதிப்படுத்தி விட்டோம்.
களப்போராட்டங்கள் வழியாக நமது தொண்டர்கள் எவ்வளவு துடிப்புமிக்கவர்கள் என்பதையும் உணர்த்திவிட்டோம்.
இவற்றின் வழியாக நமது அரசியல் உயரத்தையும் எட்ட வேண்டியிருக்கிறது.
எனவே முழு ஈடுபாட்டோடு நமது பலத்தை இரு மடங்கு உயர்த்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்ற முப்பெரும் கொள்கைகளுடன் இயங்கும் மனித நேய ஜனநாயக கட்சி, தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாக செயல்படும் என்பதை தொடர்ந்து நிரூபிப்போம்.
புதிய பாதை : புதிய பயணத்தில் இனி வரும் மாதங்கள் புத்துணர்ச்சிமிக்கவையாக இருக்கும்.
இதில் மனிதநேய சொந்தங்களின் வியர்வை துளிகள் எரிபொருளாக இருந்திட வேண்டும்.
அந்த வகையில் துடிப்புடன் கட்சிப்பணியாற்றிட தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிலம் அதிர போராடுவோம்; நீதிக்காக குரல் கொடுப்போம் என்ற முழக்கம் பரவலாகட்டும்…!
அன்புடன்,
மு.தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி


























