சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் இயக்குனர் மடோ அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் லீட் ரோலில் நடித்துள்ள திரைப்படம் மாவீரன்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மிஸ்கின், யோகி பாபு, மோனிஷா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கதைச்சுருக்கம் :-
கார்ட்டூன் சத்யா( சிவகார்த்திகேயன்) சென்னையின் குடிசைப் பகுதியில் வசிக்கும் சாதாரண இளைஞன். பூர்வகுடி மக்களை அவர்கள் தங்கி இருக்கும் இடத்திலிருந்து மக்கள் மாளிகை எனும் அரசு குடியிருப்புக்கு அரசு மாற்றுகிறது. ஆனால் அங்கே தொட்டால் சுவர் விழும் நிலையில் தரமற்ற வீடுகள் இருக்கிறது. இதனைக் கண்டு சத்யாவின் அம்மா சரிதா கொந்தளிக்கிறார். அவரை அட்ஜஸ்ட் செய்து வாழும்படி கூறுகிறார் சிவகார்த்திகேயன். எதற்கெடுத்தாலும் பயந்த சுபாவமான சத்யா( சிவகார்த்திகேயன்) இந்த தரமற்ற வீடுகளை கட்டிக் கொடுத்த அந்தத் துறையின் அமைச்சர் மிஸ்கினை எதிர்க்கிறார். மிஸ்கின் ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனை தீர்த்து கட்ட திட்டமிடுகிறார். கோழையான சத்யா வீரனாக மிஷினுடன் மோதி வென்றாரா? தரமற்ற வீடுகளில் இருக்கும் மக்களை சத்யாவான சிவகார்த்திகேயன் காப்பாற்றினாரா? என்பது படத்தின் மீதி கதை.
சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான கதாபாத்திரம். சத்யாவாக குடிசைப் பகுதி இளைஞனாக நடித்து நம்மை கவர்கிறார். இயக்குனர் மிஷ்கின் அவர்களின் வில்லத்தனமான நடிப்பு அருமை. ஆனால் முதல் பாதையில் வில்லனாக காட்டப்பட்ட பில்டப் இரண்டாம் பாதியில் உடைகிறது.

நடிகர் யோகி பாபு நீண்ட நாட்களுக்கு பிறகு மக்களை திரையரங்கில் சிரிக்க வைக்கிறார். அவரது காமெடி இந்த திரைப்படத்திற்கு வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. கதாநாயகியான அதிதி சங்கர், அம்மாவான சரிதா போன்றோருக்கு சிறிய கதாபாத்திரங்கள். அழுத்தமான காட்சிகள் இவர்களுக்கு ஏதுமில்லை.
முதல் பாதி படம் நம்மை நன்றாக என்டர்டைன்மென்ட் செய்கிறது. சிரிக்க வைக்கிறது. இரண்டாம் பாதி சீரியஸாக செல்வது நம்மை சோதிக்கிறது. எளிய மக்களை அவர்கள் வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதை அழுத்தமாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனர் மடோன் அஸ்வின் இன்னும் கொஞ்சம் கதையை சரியாக கையாண்டு இருந்தால் வேறு லெவலில் இருந்திருக்கும். நிச்சயம் இந்த திரைப்படம் ஒரு விவாதத்தை கிளப்பி இருக்கும்.
இசையமைப்பாளர் பரத் சங்கர் அவர்களின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். நடிகர் விஜய் சேதுபதியின் பின்னணி குரல் படத்திற்கு வழி சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. அதுவும் ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்த ஒரு உணர்வை நமக்குத் தருகிறது.
படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ் அவர்களின் தொழில்நுட்பம் இயக்குனர் மடோன் அஸ்வின் திரைக்கதைக்கு வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் விது ஐயனாவின் கேமரா கோணங்கள் எளிய மக்களின் குடிசை வாழ் பகுதிகளை நன்றாக காட்சிப்படுத்தி இருக்கிறது.
மொத்தத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்க தியேட்டர் சென்றால் நிச்சயம் மாவீரனை கொண்டாடுவீர்கள். இரண்டாம் பாதியில் கொஞ்சம் கான்சன்ட்ரேட் பண்ணி இருந்தால் மாவீரன் பெரும் வெற்றியை சூடி இருப்பான்.


























