இன்று தமிழ்நாடு அரசு சார்பில் ஓர் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில் வரும் நவம்பர் 4ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ள மகாவீர் நிர்வான் விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

அதே நவம்பர் 4ம் தேதி அன்றுதான் தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகையும் வருகிறது. தீபாவளி என்றாலே இறைச்சி சமைத்து உண்பது என்பது பெரும்பாலானத் தமிழர்களின் பழக்கமாக இருந்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்ட அந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பொது மக்களும் எதிர்க்கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை கடுமையாகப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாகத் தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஜெயின் வழிபாட்டுத் தலங்கள் அருகில் உள்ள இறைச்சிக் கடைகள் மட்டும் அன்று மூடியிருக்கும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
























