குட்டி பட்டாசு பாடல் மூலம் இளைஞர்களின் மனம் கவர்ந்த கவிஞரான அ.ப. இராசா சமீபத்தில் போர்த் எஸ்டேட் தமிழ் ஊடகத்தின் Behind the screen நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அதில் அவரது திரை அனுபவங்கள், வாசிப்பின் முக்கியத்துவம், ஏன் வைரமுத்துவை கொண்டாட வேண்டும் என்ற பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார் . ட்ரெண்டிங் கவிஞராக அறியப்படும் அ.ப. இராசாவின் நேர்காணலில் அடங்கிய முக்கியமான சில கருத்துக்கள் இதோ;

நான் வாசனைகளை வைத்து மனிதர்களை அறிந்து கொள்ளும் வேட்டை நாய்
உங்கள் பாடல்களில் ஏன் பல இடங்களில் நறுமணம் குறித்த வரிகள் இடம்பெறுகிறது என்று நெறியாளர் அருள்மொழிவர்மன் கேட்ட கேள்விக்கு சுவையான பதில் கொடுத்திருந்தார் கவிஞர் அ.ப. இராசா. அதில், “நான் வாசனைகளை வைத்து மனிதர்களை அறிந்து கொள்ளும் வேட்டை நாய்; நான் எப்போதும் பல விவரங்களை வாசனை வைத்தே அறிந்துகொள்வேன்” என்று கூறியிருந்தார். மேலும், ஒவ்வொரு ஊருக்கும் இருக்கும் வாசனையையும் தனது நல்ல தமிழில் அழகாக விளக்கினார். தேனியை பூர்வீகமாக கொண்ட கவிஞர் அ.ப. இராசா தனது மண் வாசம் பற்றியும் பேசியுள்ளார். குறிப்பாக தமிழ் திரையுலகில் சமீப காலங்களில் நிரந்தர முழுநேர பாடலாசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றி கேள்வி எழுப்பிய போது சினிமாவுக்கு முழுநேர பாடலாசிரியர்கள் ஏன் தேவை என்பதை மிக யதார்த்தமாக விளக்கியுள்ளார்.

பாடலாசிரியர்கள் இங்கு முழுமையான சுதந்திர உணர்வுடன் எழுத முடிவதில்லை
“கவிப்பேரரசு வைரமுத்துவுடன் பழக்கமில்லை; அவருடன் நெருக்கம் இல்லை; ஆனாலும் அவரும் நானும் அவரது வரிகள் மூலம் எப்போதும் நெருக்கம் தான்” என்று நெகிழ்ச்சிபட பேசியிருந்தார். அதே சமயத்தில் நல்ல தமிழ் பாடல்கள் வராதது குறித்து கேள்வி எழுப்பியபோது வணிக ரீதியாக இருக்கக் கூடிய நெருக்கடிகள் குறித்தும், பாடலாசிரியர்கள் இங்கு முழுமையான சுதந்திர உணர்வுடன் எழுத முடிவதில்லை என்ற கருத்தையும் தெரிவித்தார். நல்ல தமிழ் வார்த்தைகள் இல்லாத பாடல்கள் வருவது ஆரோக்கியமானது இல்லை என்பதை உணர்வதாகவும் கூறினார். இன்னும் பல சுவாரசியமான கருத்துக்களை கூறியுள்ளார் ட்ரெண்டிங் கவிஞர் அ.ப. இராசா.
முழு வீடியோவை காண :https://www.youtube.com/watch?v=sI4QJqOF4rI


























