Urban boyz studios தயாரிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில், இயக்குனர் ஷங்கர் வெளியீட்டில் வெளிவந்திருக்கும் திரைப்படம் அநீதி.
இந்தத் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், சாந்தா தனஞ்ஜெயன், காளி வெங்கட், சாரா, பரணி, வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

கதைச்சுருக்கம் :-
சென்னையில் மீல்ஸ் மங்கி எனும் உணவு நிறுவனத்தில் புட் டெலிவரி பாயாக வேலை செய்கிறார் அர்ஜுன் தாஸ். இவருக்கு யாரைப் பார்த்தாலும் கொல்ல வேண்டும் என்ற ஒரு மன நோய் இருக்கிறது. அப்போது ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்யும் துஷாரா விஜயன் மீது காதல் ஏற்படுகிறது. துஷாராவை காதலிப்பதால் அவருடன் கூடவே இருப்பதால் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் முற்றிலுமாக அர்ஜுன் தாஸ்க்கு மறைகிறது. துஷாராவின் எஜமானி ஆன பணக்காரப் பாட்டி எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். இறந்த பாட்டியின் மகன், மகள் குடும்பத்தினர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். சூழ்நிலை கைதிகளாக அர்ஜுன் தாசும், துஷாராவும் மாட்டிக் கொள்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இவர்களுக்கு நடந்த அநீதி என்ன என்பது படத்தின் மீதி கதை?
வெயில், அங்காடித்தெரு போன்ற படங்கள் மூலம் எளிய மனிதர்களின் வாழ்க்கையை பேசி தமிழ் திரை உலகில் பெரிய கவனம் ஈர்த்தவர் இயக்குனர் வசந்த பாலன். சினிமாவில் உதவி இயக்குனராக சேர விரும்பும் பல இளைஞர்களின் கையில் அங்காடித்தெரு திரைக்கதை புத்தகம் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட வசந்தபாலன் அநீதி திரைப்படத்திலும் எளிய மக்களின் வாழ்க்கையை, வலிகளை, பொருளாதார நெருக்கடியை பதிவு செய்து நம்மை கவனம் இருக்கிறார். ” மழை பேஞ்சதும் போங்க, முழுசா மழையில நனைஞ்சிட்டீங்க. தலைய துவட்டிக்குங்கன்னு சொல்றது முதலாளியின் குரலா இருக்காது, அது ஒரு தொழிலாளியின் குரல் தான்” என பேசும் வசனம் திரையரங்கில் கைத்தட்டல் பெறுகிறது.

கைதி, மாஸ்டர், அந்தாகரம் போன்ற படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அர்ஜுன் தாஸ் ஹீரோவாக படத்தை தாங்கி பிடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் சில காட்சிகளில் முகத்தில் ஒரே மாதிரியான முகபாவனை வெளிப்படுவது சற்று சோர்வை தருகிறது. துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகருகிறது, கழுவேத்தி மூர்க்கன் போன்ற படங்களில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியவர். இந்த அநீதி படத்தில் பக்கத்து வீட்டு பெண்ணாக, எளிய குடும்பத்தின் சூழ்நிலை கருதி பணக்கார வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக நடித்து அசத்தியிருக்கிறார். பணக்கார பாட்டி துஷாராவை சந்தேக பார்வையில் செயல்படும் விதங்களில் எதுவும் செய்ய முடியாத துஷாராவை பார்த்து நம் இதயம் கனக்கிறது. வனிதா விஜயகுமார், ஷாரா, பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, காளி வெங்கட் போன்றோர் அவரவர் கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். காளி வெங்கட் தூத்துக்குடி பகுதியில் மக்கள் பேசும் வட்டார மொழியில் பேசி அசத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகள் சற்று கொடூரமாக இருப்பதை குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பணக்காரர்கள் குடும்ப வறுமையால் வேலைக்கு வரும் ஏழை மக்களை எவ்வளவு இளக்காரமாக நடத்துகிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் வசந்தபாலன். முதல் பாதி எதார்த்தமாக நகர்ந்து இரண்டாம் பாதியில் வரும் கேரக்டர்கள் பரபரப்பை கூட்டுகிறது.

ஜிவி பிரகாஷ் குமாரின் இசை மற்றும் பாடல்கள் இந்த திரைப்படத்தில் பெரிய கவனம் பெறவில்லை. ஒளிப்பதிவாளர் எட்வின் கேமரா கோணங்கள் சிறப்பு. படத்தொகுப்பாளர் ரவிக்குமாரின் படத்தொகுப்பு படத்திற்கு தேவையான விஷயத்தை செய்திருக்கிறது.
மொத்தத்தில் எளிய மக்களின் பின்னணி கொண்ட யதார்த்த படங்களை விரும்புபவர்கள் நிச்சயம் இந்த திரைப்படத்தை கொண்டாட வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் வசந்தபாலன்.


























