கமர்ஷியல் படங்களை தனக்கே உரிய பாணியில் எடுத்து ரசிகர்களுக்கு படத்திற்கு படம் விருந்து கொடுப்பவர் வெங்கட்பிரபு. 2007ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான ‘சென்னை 28’ படம் இன்னமும் ரசிகர்களின் விருப்பப்பட லிஸ்டில் உள்ளது. இதைத்தொடர்ந்து சரோஜா, கோவா உள்ளிட்ட படங்களை இவர் இயக்கினார்.
இவர் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான ’மங்காத்தா’ படம் அஜித்தின் கரியரில் மிக முக்கியப் படமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் சிலம்பரசன் நடிப்பில் இவர் இயக்கி வெளியான ’மாநாடு’ படம் 100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது. தற்சமயம் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, அரவிந்த் சாமி, பிரியாமணி நடிப்பில் ’கஸ்டடி’ படம் வெளியாகி திரையரங்குகளில் ஒளிபரப்பாகிவருகிறது.
இந்நிலையில் தான், ’இந்த காம்போ இணையாதா?’ எனக்காத்திருந்த ரசிகர்களின் காதுகளுக்கு விருந்தளிக்கும் விதமாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
விஜய் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ’லியோ’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். அண்மையில் காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் நிலையில் உள்ளன.
முன்னதாக விஜய் நடித்த ’புதிய கீதை’ படம் தவிர வேறு எந்தப் படமும் விஜய் – யுவன் கூட்டணியில் வெளியாகவில்லை. இப்படத்திற்கான வேலைகள் துவக்கப்படும் நிலையில், இது வெங்கட் பிரபு, விஜய் மற்றும் யுவன் ஆகிய மூன்ரு பேரின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும். இதுபற்றிய தகவல்கள் இணையத்தில் தற்சமயம் உலாவரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























