இஸ்லாமியப் பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ’புர்கா’ படம் இஸ்லாமிய சமூகத்தினரிடையே பல்வேறு எதிர்ப்புகளைப் பெற்றுவருகிறது.
சர்ஜூன் கே.எம். இயக்கத்தில், கலையரசன், மிர்னா, சூரிய நாராயணன் ஆகியோர் நடித்து ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ’புர்கா’. கணவனை இழந்து தனிமையில் இருக்கும் இஸ்லாமியப் பெண், அடைக்கலம் தேடிவரும் ஒரு இந்து இளைஞருக்கு உதவுவதும், அதனால் இருவருக்கும் நெருக்கம் ஏற்படுவதுமான கதையமைப்புடன் உருவாகியுள்ள இத்திரைப்படம், இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் வாழ்வியல் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியான சமயமே இதன் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்த நிலையில், கடந்த 7ம் தேதி இப்படம் வெளியானது.
இந்நிலையில், ’புர்கா’ படத்தில் இஸ்லாம் குறித்தும், இஸ்லாமியப் பெண்ணின் வாழ்வியல் குறித்தும் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே இப்படம் கடும் எதிர்ப்புகளையும் அதிருப்தியையும் பெற்றுவருகிறது.
இப்படம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் விமர்சனம் தெரிவித்திருந்த இஸ்லாத்தைச் சேர்ந்த மௌலானா (மதபோதகர்) ஒருவர் இப்படம் குறித்து கடுமையாகப் பேசியுள்ளார். இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணிவது கட்டாயம் மற்றும் தவறு போன்றும், அவர்கள் இஸ்லாமிய சட்டங்களுக்கு செவிசாய்க்காமல் சுதந்திரமாகத் திரிய நிர்பந்திக்கப்படுவதாகவும், அதற்கு எடுத்துக்காட்டாக அபத்தமான முறையில் குர்ஆன் வசனத்தை படத்தின் இறுதியில் வைத்து இயக்குநர் அதை நியாயப்படுத்தியுள்ளதாகவும் அவர் சீறியுள்ளார்.
மேலும் படத்தின் ஒரு காட்சியை அவர் விவரிக்கையில், ’’ஹீரோ விலை மாதரின் மகனாக திரையில் வருகிறார். அவரது தாய் விபச்சாரத்தில் ஈடுபட போகும் சமயம் தான் தனியாக விடப்பட்டு அதை நினைத்து வருந்துவதையும், கணவனை இழந்த அந்த இஸ்லாமியப் பெண் தனிமையில் வாடி வருந்துவதையும் அவர் ஒப்பிட்டுப் பேசுகிறார். இவரது தனிமையும், அந்தப் பெண்ணின் தனிமையும் ஒன்றா?. தவறான தொழில் செய்பவரின் மகனாக இருக்கும் அவர், இஸ்லாத்தில் சொல்லப்பட்டபடி கணவனை இழந்த பெண் தனிமையைக் கடைபிடிப்பதை எவ்வாறு ஒப்பிட்டுப் பேச முடியும்.
இயக்குநர் கதையின் நாயகனை விபச்சாரியின் மகனாகக் காட்டுகிறார். எனக்கு என்ன சந்தேகம் என்றால், ஹீரோ மட்டும் தான் விபச்சாரியின் மகனா? அல்லது இயக்குநரும் அப்படியேவா?” என்று கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
இதோடு இல்லாமல், இயக்குநர் சர்ஜூனையும், இதன் தயாரிப்பாளர் மோகனையும் போலீசார் கைது செய்யவேண்டும் என்றும், இல்லயென்றால் இவர்கள் மீண்டும் மீண்டும் இப்படி குர்ஆன் வசனத்தைப் பயன்படுத்தி அபத்தமான திரைப்படங்கள் இயக்குவர் என்றும், அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்படம் குறித்து அண்மையில் இஸ்லாத்திற்கு மாறிய சபரிமாலாவும் கடுமையாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சர்ச்சைக்குறிய விஷயத்தை கதைக்களமாக எடுத்துக் கொண்டதால் மத ரீதியிலான எதிர்ப்புகளை ’புர்கா’ திரைப்படம் பெற்றுவந்தாலும், பெண் சுதந்திரம் குறித்த கருத்தை முன்வைத்து, பேசப்படாத விஷயத்தைப் பேசியுள்ளதால் பாராட்டுகளையும் இப்படம் பெற்றுவருகிறது.


























