மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள நாயக்கர் பட்டி என்னும் இடத்தில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவிலான டங்ஸ்டன் கனிமத் தொகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1957 கீழ் ஒன்றிய பாஜக அரசு ஏலம் நடத்தியது. அதில் ஹிந்துஸ்தான் சிங்க் என்னும் நிறுவனத்திற்கு சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பை நடுவண் அமைச்சகம் நவம்பர் 7 அன்று வெளியிட்டது. ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனம் திட்டமிட்டபடி அந்த சுரங்கத்தை அமைத்தால் அரிட்டாபட்டி மட்டுமின்றி முத்துவேல்பட்டி, கிடாரிப்பட்டி, நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இடங்களில் சூழலியல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி மனிதர்கள் வாழ முடியாத நிலை உருவாகலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்த அபாயகரமான திட்டத்தின் மீது துவக்கத்தில் மாநில அரசின் எதிர்ப்பு இல்லாததன் காரணமாக மாநில உயர் அதிகாரிகளின் சுரங்க செயல்பாடு தொடர்பான முடிவுகளைப் பற்றிய செய்திகளை காண முடிந்தது. அதன் பிறகு அரிட்டாப்பட்டி மக்களின் தொடர் போராட்டங்களின் காரணமாக ஆளுங்கட்சி மட்டுமின்றி பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கவனிக்கத் தொடங்கின. மக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக நடுவண் அரசின் இந்தத் திட்டமானது மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு தற்போது “நான் முதல்வராக இருக்கும் வரை அந்த சுரங்க திட்டம் இங்கு வராது” என்று சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை பேச வைத்திருக்கிறது.

மக்கள் போராட்டம் ஒரு பக்கம் இந்த விவகாரத்தை கூர்மையடைய செய்திருந்தாலும் இந்த இடத்தின் சிறப்பியல்புகள் இத்திட்டத்தை தடுப்பதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. சுரங்கம் அமைக்கப்பட்டால் அரிட்டாப்பட்டி மலைப் பகுதியில் காணக் கிடைக்கும் அரிய வகை பறவை இனங்கள், பாம்பு இனங்கள் மற்றும் இந்தியாவில் இங்கு மட்டுமே காணப்படும் “லகுடு” எனப்படும் அரிய வகை வல்லூறு ஆகியவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்படும். இவை மட்டுமின்றி தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நடைபெற்று வரும் செழிப்பான விவசாயம் ஆகியவையும் ஒட்டுமொத்தமாக அழியும். “கடவுளாக எங்களைக் காத்துவரும் மலைகளை எல்லாம், ஏற்கெனவே கிரானைட் கொள்ளையர்கள் வெட்டி கூறுபோட்டு விற்றுவிட்டார்கள். இப்போது டங்ஸ்டன் சுரங்கம் என்ற பெயரில் இந்த விவசாய பூமியையும் அழிக்கத் துடிப்பவர்களுக்கு எதிராக உயிர் இருக்கும் வரை போராடுவோம்” என்று உறுதியுடன் இருக்கிறார்கள் போராடும் மக்கள்.

மக்களின் போராட்டம், அந்த செழிப்பான விவசாய பூமியின் சிறப்பு இயல்புகள் ஆகிய அத்தனை கூறுகளும் ஒருங்கிணைந்து தற்போது அப்பகுதி மக்களுக்கு ஓரளவு நிம்மதியை கிடைக்கச் செய்திருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட இதே போன்ற சிறப்பு இயல்புகளை தன்னகத்தே கொண்டிருக்கக் கூடிய “பரந்தூர்” நில விவசாயிகளின் குரல் மட்டும் மாநில அரசின் செவிகளுக்கு எட்டவில்லையா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
அரிட்டாப்பட்டியில் வரவிருந்த திட்டமானது முழுக்க முழுக்க நடுவண் அரசின் திட்டம் ஆகும். ஆனால் பரந்தூர் விமான நிலையம் என்பது மாநில அரசால் தேர்வு செய்யப்பட்ட இடமாகும். “கிரீன் பீல்ட் விமான நிலையங்கள்” அமைக்க வேண்டும் என்ற திட்டம் நடுவண் அரசுடையதாக இருந்தாலும் அதற்காக பரந்தூரை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசுதான். குறிப்பாக 700 நாட்களுக்கும் மேலாக அங்கு போராடி வரக்கூடிய மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் தற்போது அப்பகுதியில் நிலம் எடுப்பதற்கான பணிகளை முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்தப் பரந்தூர் பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் செழிப்பான விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டால் விவசாயம் மட்டுமின்றி இங்கு இருக்கும் பல ஏரிகளும் நீர் நிலைகளும் அழிக்கப்படும். அப்படி அவை அழிக்கப்படும் பட்சத்தில் அப்பகுதி மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். அதற்கு இழப்பீடாக எவ்வளவு லட்சங்களைக் கொடுத்தாலும் அவர்களால் மீண்டு வரவே முடியாத சூழலுக்கு தள்ளப்படுவார்கள். “சொந்த நாட்டில் நாங்கள் அகதிகளாகும் சூழல் உருவாகும்” என்று கதறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

ஆனால், இந்தத் திட்டத்தின் மீதான சூழலியல் தாக்க மதிப்பீடு இதுவரை பொதுமக்களின் பார்வைக்கு ஏன் வரவில்லை? என்றும் தொடர்ந்து சென்னையை சுற்றி மட்டுமே திமுக அரசு வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குவதாகவும, திராவிட மாடல் அரசின் பொருளாதாரக் கொள்கைதான் என்ன? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை Fourth Estate தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் எழுப்பி இருக்கிறார் வழக்கறிஞரும் சூழலியல் செயல்பாட்டாளருமான திரு. வெற்றிச்செல்வன்.
Link : https://youtu.be/4GTUZAILS38?si=TN7SDZaFhSMeK186

நடுவண் அரசு மூலமாக வரவிருந்த திட்டத்தை மக்களின் தொடர் போராட்டத்தால் எதிர்த்திருக்கும் மாநில அரசு, கிட்டத்தட்ட 1000 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் பரந்தூர் மக்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? மேலும், பரந்தூரில் தான் விமான ஓடுதளம் அமைப்போம் என்று பிடிவாதமாக இருப்பது ஏன்? இதன் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் அரசியல் என்ன? என்ற கேள்விகளுக்கு திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு – திராவிட மாடல்தான் பதில் கூற வேண்டும். ஆனால், மக்கள் மத்தியிலோ அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய்! பரந்தூருக்குச் சுண்ணாம்பா? என்ற ஒப்பீடு எழத் துவங்கி இருக்கிறது.
அருள்மொழிவர்மன்
ஊடகவியலாளர்


























