கடந்த 1 வருடத்தில் ரூ.6 லட்சத்திற்கு சுமார் 8,428 தட்டு இட்லிகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 30ம் தேதியான நேற்றைய தினம் உலக இட்லி நாள் கொண்டாடாட்ட நிலையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 33 மில்லியன் தட்டு இட்லிகளை விற்பனை செய்துள்ளதாக பெங்களூருவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற நகரங்கள் அதிக இட்லிகளை ஆர்டர் செய்யும் இடங்களாக உள்ளனவாம். இந்த நகரங்களைத் தொடர்ந்து மும்பை, கோயமுத்தூர், புனே, விசாகப்பட்டினம், டெல்லி, கொல்கத்தா மற்றும் கொச்சி ஆகிய நகரங்கள் அதிக இட்லிகளை ஆர்டர் செய்துள்ளனவாம்.
2022 மார்ச் 30ம் தேதியிலிருந்து 2023 மார்ச் 25ம் தேதி வரையான ஒருவருட காலத்தில் கணக்கிடப்பட்ட தரவுகளின்படி பெரும்பாலானோர் காலை 8 மணிமுதல் 10 மணிவரை அதிக இட்லிகளை ஆர்டர் செய்வதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆயினும், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கோயமுத்தூர், மும்பை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரவு நேர உணவாக இட்லியை ஆர்டர் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கி நிறுவனத்தின் கடந்த ஒருவருட தரவுகளின்படி, அதிகபட்சமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 6 லட்சம் ரூபாய்க்கு, 8,428 தட்டுகள் அளவிலான இட்லிகளை ஆர்டர் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதை அவர் தான் ஹைதராபாத்தில் இருக்கும்போதும், தனது குடும்பத்தினர், நண்பர்கள், ஆகியோருக்காகவும், பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும் ஆர்டர் செய்துள்ளார்.
ப்ளெயின் இட்லி அதிக நபர்களால் ஆர்டர் செய்யப்பட்ட இட்லியாக உள்ளது. மேலும், ரவா இட்லி, நெய் காரப்பொடி இட்லி, தட்டை இட்லி, மினி இட்லி ஆகியவையும் அதிக மக்களால் ஆர்டர் செய்யப்பட்ட இட்லியாக உள்ளன. காலை உணவாக மசால் தோசைக்குப் பிறகு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக இட்லி உள்ளது என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இட்லியுடன் மெதுவடை, சாம்பார், தேங்காய் சட்னி, மிளகாய் சட்னி, டீ, காபி உள்ளிடட் உணவுப்பொருட்களும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்களின் அடிப்படையில் இட்லி விற்பனைக்கு மிகவும் பிரபலமான உணவகங்களாக பெங்களூரு மற்றும் சென்னையிலுள்ள A2B – அடையார் ஆனந்தபவன், ஹைதராபாத்திலுள்ள வரலட்சுமி டிஃபின்ஸ், சென்னையிலுள்ள சங்கீதா சைவ உணவகம் மற்றும் ஹைதராபாத்திலுள்ள உடுப்பி உபாகர் ஆகியவை உள்ளன.


























