பஃபர் எனப்படும் பலூன் வடிவ முள் மீனை உட்கொண்ட முதிய தம்பதியரில் மனைவி உயிரிழந்து, கணவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடல் உணவு எனப்படும் Sea Food உணவுவகை பலராலும் ரசித்து, ருசித்து உண்ணப்படும் உணவு. இதில் இறால், மீன், நண்டு, லாப்ஸ்டர் என்று கணக்கிடமுடியாத வகை உணவுகள் உண்டு. இதில் மீன் வகைகளுக்கு தனி பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். அப்படி ஒரு முதிய மீன் பிரியர் தம்பதியின் முயற்சி தான் தற்பொழுது விபரீதத்தில் முடிந்துள்ளது.
மலேசியாவில் வசிக்கும் 84 வயது மதிக்கத்த முதிய ஜோடி அண்மையில் தாங்கள் வழக்கமாக மீன் வாங்கும் வியாபாரி ஒருவரிடமிருந்து வாங்கிவந்துள்ள பஃபர் வகை மீனை உட்கொண்டுள்ளனர். பஃபர் மீனை நம்மில் சிலர் இதற்கு முன்னதாக வீடியோக்களில் பார்த்திருக்கலாம். உடல் முழுக்க முட்கள் நிறம்பி சற்றே முரட்டுத்தனமான முகமுடைய இந்த மீன், எதிரிகளிடமிருந்து ஆபத்து வரும் சமயம் பலூன் போல் காற்றை விழுங்கி அளவில் பெரியதாக பிற மீன்களால் விழுங்க முடியாத நிலைக்கு உருமாறிவிடும்.
இந்நிலையில், இதை உண்ட முதிய பெண்மணிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதையடுத்து பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதை உட்கொண்ட அவரது கணவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அத்தம்பதியின் மகள் விவரிக்கையில், பல ஆண்டுகளாக அந்த மீன் வியாபாரிடமே தங்களது பெற்றோர் மீன் வாங்கி உண்டு வருவதாகவும், இந்த முறை பஃபர் மீன் என்று தெரியாமல் வாங்கி அதை உண்டுவிட்டதாகவும் தெரிவித்தார். பொதுவாக பஃபர் வகை மீன்களின் நச்சுத்தன்மை இருக்கும் என்றும் இதை பக்குவமாக சமைக்கத் தெரிந்தவர்களாலேயே விஷத்தன்மையின்றி சமைக்கமுடியும் என்றும் கூறப்படுகிறது. மீன்களின் எந்த அளவுக்கு ருசி உள்ளதோ அதே அளவுக்கு ஆபத்தும் உள்ளது என்பதை இச்சம்பவம் மீன் பிரியர்களுக்கு உணர்த்தியுள்ளது.


























