பென்சில்வேனியாவில் சாக்லெட் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின்போது பெண் ஒருவர் சாக்லெட் தொட்டிக்குள் விழுந்து உயிர்பிழைத்துள்ளார்.
அமெரிக்கா: பென்சில்வேனியா பகுதியின் வெஸ்ட் ரீடிங் நகரில் அமைந்துள்ள சாக்லெட் தயாரிக்கும் ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பணிபுரியும் பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக சாக்லெட் தயாரிக்கும் தொட்டிக்குள் விழுந்து தீ விபத்திலிருந்து தப்பித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், விபத்துக்கு முன்னதாக எரிவாயு வெளியாவது குறித்து ஆலை நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்ததாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் தனது 2 நண்பர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் சாக்லெட் தொட்டியில் விழுந்து உயிர்பிழைத்த பெண்மணி பேட்ரிசியா போர்ஜஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பேசுகையில், ’’நாங்கள் பணியிலிருந்த சமயம் எரிவாயு வெளியேறும் வாசனை வந்தது. அது மிகவும் வலுவாகவும், மேலும் குமட்டலையும் ஏற்படுத்தியது. நாங்கள் எங்கள் மேற்பார்வையாளரிடம் இதுகுறித்து தெரிவித்து நாங்கள் வெளியேறட்டுமா என்று கேட்டோம். ஆனால் அவர் இதுகுறித்து உயர்அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும், அவர்களே இது சார்ந்து முடிவெடுக்கமுடியும் என்றும் கூறினார். அதைத்தொடர்ந்து மீண்டும் நாங்கள் பணியில் இயங்கத் துவங்கிவிட்டோம்.
மாலை 5 மணி இருக்கும். இரண்டு மாடிகளைக் கொண்ட எங்கள் ஆலை வெடித்துச் சிதறியது. எங்கும் கூச்சலும், தீப்பிழம்புகளாகவும் இருந்தன. சிறுது நேரத்தில் என்மீது தீப்பிழம்புகள் படரத்துவங்கியதும் என்னுடைய இறுதி நாள் இது தான் என்று நினைத்துக்கொண்டேன். கடவுளிடம் ஏன் இவ்வளவு கொடூரமான மரணத்தை எனக்குத் தருகிறாய் என்று வேதனைப்பட்டேன். ஏனெனில் நான் தீயில் எரிந்து சாக விரும்பவில்லை.
ஒருகட்டத்தில் தீயிடமிருந்து தப்பிக்க நான் ஓடும்பொழுது என்னை அறியாமல் ஆலையின் அடித்தளத்திலிருந்த சாக்லெட் தொட்டிக்குள் விழுந்துவிட்டேன். நல்வாய்ப்பாக சாக்லெட் என்னுடைய தீ அனைத்தையும் அணைத்துவிட்டது. ஆனால் விழுந்ததில் என்னுடைய கால் எலும்புகள் உடைந்துவிட்டன. நீண்ட நேரமாக அதிலிருந்த நான் உதவிக்காக கூச்சலிட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் யாரும் வரவில்லை. நான் நடந்தவற்றை வெளியில் கூறினால் தான் இப்படியெல்லாம் எதிர்காலத்தில் விபத்து நிகழாது. அது தான் உயிரிழந்த என் சக ஊழியர்களுக்கு நான் செய்யும் நியாயமாக இருக்கும்” என்று தழுதழுத்த குரலில் பேசிமுடித்தார்.


























