90களில் பிறந்தவர்கள் பெரும்பாலானோருக்கு யுவன் இசையின் மீது பெரும்பித்து இருப்பதைக் காண முடியும். இந்தியத் திரையிசையின் முடி சூடா மன்னன் இசைஞானி இளையராஜா 70களின் இறுதியிலிருந்து தனது ஆளுகையை செலுத்தத் தொடங்கினார். 80கள் முழுவதும் தென்னிந்திய திரையுலகையே தன் ஹார்மோனியத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றே சொல்லுமளவு அவரது பங்களிப்பு இருந்தது. எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜாவை நெருங்க முடியாது என்கிற நிலைதான் இருந்தது. அப்படியான சூழலில் 90களின் தொடக்கத்தில் முற்றிலும் வேறொரு பாணி இசையைக் கைக்கொண்டு வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜா கர்நாடக சங்கீதம், நாட்டுப்புற இசை இரண்டையும் கையாண்டார் என்றால் ரஹ்மான் மேற்கத்திய இசையையும் அரபிய இசையையும் கையாண்டு கால மாற்றத்துக்கு ஏற்ப இளமைத் துள்ளலுடனான இசையைக் கொடுத்தார்.
இந்த இருபெரும் ஆளுமைகள் கோலோச்சிக் கொண்டிருக்கும் காலத்தில் தன் 16 வயதில் ‘அரவிந்தன்’ படம் மூலம் அறிமுகமாகிறார் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் இளைய மகன் என்பது மட்டும்தான் அப்போதைக்கு அவரது அடையாளமாக இருந்தது. 90களின் இறுதியில் திரைத்துறைக்குள் நுழைந்தாலும் 2000 களில்தான் அவர் யுவனின் கொடி உயர ஆரம்பித்தது. 2000ம் ஆண்டு வெளியான தீனா படத்தில் இடம்பெற்ற ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ பாடல் மிகப்பெரும் வெற்றியடைந்தது. 2001ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் யுவன் இசையமைத்த பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பின. குறிப்பாக பள்ளி – கல்லூரி மாணவர்களை அந்த இசை கட்டிப் போட்டது என்றே சொல்ல வேண்டும். இளையராஜா – பாரதிராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம் கூட்டணி எப்படி ஒரு வெற்றிகரமான கூட்டணியாக இருந்து நல்ல படங்களையும் பாடல்களையும் கொடுத்தது போல் யுவன் சங்கர் ராஜா – செல்வராகவன் கூட்டணியும் பெருவெற்றியைப் பெற்றது. காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களின் ஆல்பம் அதிரிபுதிரி ஹிட் ஆனது.

7 ஜி ரெயின்போ காலனி, தமிழ் காதல் திரைப்படங்களிலேயே கல்ட் மூவியாக ஆனதற்குப் பின்னால் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் முக்கியக் காரணம். ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்’ பாடல் அதுவரையிலான படத்தின் போக்கையே மாற்றி வேறொரு தளத்துக்கு கொண்டு சென்றிருக்கும். அதனை சோக காவியமாக மாற்றியிருக்கும். செல்வராகவனைப் போலவே இயக்குநர் வெங்கட்பிரபு, இயக்குநர் ராம் உடனான கூட்டணியும் வெற்றி பெற்றது. வெங்கட்பிரபுவுடன் 600028, சரோஜா, கோவா ராம் உடன் கற்றது தமிழ், தங்க மீன்கள் ஆகிய படங்களில் யுவன் இசைக்கான முக்கியத்துவம் அதிகம் இருக்கும். கலோக்கியலாக சொல்லப்போனால் இப்படங்களில் எல்லாம் யுவன் விலாசித் தள்ளியிருப்பார். காதல் சோகப்பாடல்கள் யுவனின் அடையாளமாகவே மாறியது. ‘தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்’ ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்’ ‘இதுவரை இல்லாத உறவிது’ போன்று யுவன் இசையமைத்த காதல் சோகப்பாடல்களின் பட்டியல் நீண்டது. அவை எல்லாம் உணர்வுப்பூர்வமாக அச்சோகத்தை பார்வையாளனுக்குக் கடத்துபவையாக இருந்ததுதான் யுவனின் சிறப்பு. புதுப்பேட்டை பட ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு நாளில் வாழ்க்கை இங்கே’ பாடல் பல இளைஞர்களின் ஆந்தமாகவே இன்றைக்கும் இருக்கிறது.
நல்ல இசையமைப்பாளருடன் நல்ல பாடலாசிரியர் இணையும்போதுதான் தரமான பாடல்கள் உருவாகும். அப்படியாக யுவனுக்குக் கிடைத்த செல்வம் என பாடலாசிரியர் நா.முத்துக்குமாரைச் சொல்லலாம். நா.முத்துக்குமார் – யுவன் கூட்டணி என்பது கண்ணதாசன் – எம்.எஸ்.வி, வைரமுத்து – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியைப் போல வலுவானதாக இருந்தது. இக்கூட்டணிக்கென பெரும் ரசிகப்பரப்பு இன்றளவிலும் இருக்கிறது. ஏற்ற இறக்கங்களாலானதுதான் எல்லாமும். இன்றைக்கு அனிருத், சந்தோஷ் நாராயணன் போன்ற இசையமைப்பாளர்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும் யுவனுக்கான பிரத்யேகமான ரசிகப்பரப்பு எவ்வித மாறுதலும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள யுவனின் திரைப்பங்களிப்பு தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்கவே முடியாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். தமிழ்த்திரை இசையின் இளவரசன் யுவனுக்கு இன்று பிறந்த நாள். அவரது கோடானு கோடி ரசிகர்கள் சார்பாக அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை உரித்தாக்குவோம்.
























