நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் மதுரை கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட சமயம், மாணவர்கள் வெயிலில் காக்கவைக்கபட்ட நிகழ்வு சர்ச்சையாகியுள்ளது.
நடிகர் சூர்யா மதுரையிலுள்ள கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட குடும்பத்தினருடன் கடந்த ஏப்ரல் 1ம் தேதி சென்றிருந்தார். தனது மனைவி ஜோதிகா, மகன் மற்றும் மகள் தேவ், தியா, தந்தை சிவக்குமார் உட்பட குடும்ப சகிதமாக அவர் மதுரைக்கு சென்றிருந்தார். மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடன் இருந்து அவர்களுக்கு கீழடி குறித்த சிறப்புகளை விளக்கினார்.
இந்நிலையில், சூர்யா மற்றும் குடும்பத்தினர் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடச் சென்ற காரணத்தால் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் அங்கு சிறுது நேரம் அனுமதி மறுக்கப்பட்டது தற்சமயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவில் காலை 10 மணிமுதல் பொதுமக்கள் பார்வைக்கு கீழடி அருங்காட்சியகம் திறக்கப்படும் நிலையில், சூர்யா குடும்பத்தினர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டதன் காரணமாக சுமார் 1½ மணி நேரம் பார்யவையாளர்களும், மாணவர்களும் வெயிலில் காக்கவைக்கப்பட்டு தாமதமாகவே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடிப்படையில் மற்ற திரைப்பிரபலங்களைப் போல் அல்லாமல் சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகர்களுள் ஒருவர் என்று போற்றப்படுபவர் நடிகர் சூர்யா. தனது அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி கற்கமுடியாத ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து அவர்களை உயர்பொறுப்புகளில் அமர்த்தி அழகுபார்ப்பவர். தனது திரை வாழ்க்கையிலும் ’ஜெய்பீம்’ போன்ற சமூகநீதிக் கருத்துகளைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்து, நடித்து வருபவர்.
அப்படிப்பட்ட சூர்யா இவ்வாறு பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டது பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. படங்களில் மட்டும் சமூக நீதி, சீர்த்திருத்தக் கருத்துகளை பேசிவிட்டு நடைமுறையில் அதை செயல்படுத்தாத சூர்யா ரியல் ஹீரோ அல்லாத ரீல் ஹீரோ என்று பலரும் கருத்திட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் ஜெய்பீம் திரைப்படத்தின் இறுதியில் வழக்கறிஞர் சூர்யாவும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியும் நாற்காலியில் சமமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும், தற்சமயம் மாணவர்கள் வெயிலில் காத்திருக்க அவர் குடை நிழலில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டு அவருக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுகுறித்து சூர்யா தரப்பிலிருந்து எதுவும் விளக்கம் அளிக்கப்படவில்லை.


























