கர்நாடகாவில் பிறந்த குழந்தை ஒன்று தெரு நாய்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெரு நாய்கள் மூலம் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுவரும் சம்பவங்கள் நாடெங்கிலும் அதிகரித்தவண்ணம் உள்ளன. பொதுமக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாட முடியாத அளவுக்கு, எப்பொழுது தெருநாய்த் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பயத்திலேயே அவர்கள் உலவவேண்டியுள்ளது. அந்த அளவுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்களின் தாக்குதலால் பெருத்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அந்த வகையில், கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்று, அங்கு சுற்றித்திரியும் தெருநாய் ஒன்றால் வாயால் கவ்விக் கொண்டுசெல்லப்பட்ட காட்சியை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். தொடர்ந்து அந்த நாயை விரட்டிவிட்டு அந்த குழந்தை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக இருந்துவந்துள்ளதாகவும், இது அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தொல்லையாக அமைந்து இதுகுறித்து புகாரளிக்கப்பட்டும் நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் குழந்தை இறப்பு குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்கப்பட்ட நிலையில், அது அங்கு பிறந்த குழந்தை இல்லை என்றும், அச்சமயம் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பத்திரமாக இருப்பதாகவும், தெரு நாய்கள் வேறெங்கிலிருந்தும் குழந்தையைக் கவ்விக்கொண்டுவந்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.


























