கேரளாவில் ஓடும் இரயிலில் பயணி ஒருவரால் சக பயணி மீது தீவைத்து எரிக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறி அதிரவைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இக்குற்றச்செயலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கேரளாவின் ஆலப்புழா – கண்ணூர் இடையே பயணித்த விரைவு இரயில், கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதிக்கு அருகே சென்றுகொண்டிருந்த சமயம் இரவு சுமார் 9.30 மணிவாக்கில் அதிலிருந்த D1 பெட்டியில் மர்ம நபர் ஒருவரால் பெண் பயணி ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்ட்து. இது உடன் பயணித்த பயணிகளை பீதியில் ஆழ்த்தியது.
உடனடியாக பயணிகள் இரயிலின் சங்கிலியைபிடித்து இழுக்கவே, இக்குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளி இரயிலிலிருந்து கண நேரத்தில் தப்பிச்சென்றுள்ளான். தீ பற்றிய பீதியில் இரயிலிலிருந்து குதித்த இரண்டு பேர் உட்பட இச்சம்பவத்தில் ஒரு ஆண், ஒரு பெண், ஒரு குழந்தை என 3 பேர் இதில் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பயணிகள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இச்செயலில் ஈடுபட்ட நபர், குறிப்பிட்ட நபர் மீதான வன்மத்தில் இச்செயலைச் செய்துள்ளாரா? அல்லது மொத்த இரயில் பெட்டியையும் தீப்பற்றவைக்கும் முயற்சியில் இவ்வாறு நடந்துகொண்டாரா? என்பது குறித்த விசாரணை நடைபெற்றுவருகிறது. இதைத்தொடர்ந்து தப்பிச்சென்ற குற்றவாளியின் புகைப்படம் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வரையப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.



























