பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடியில் புதிய சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் கட்டும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு நீடிக்கிறது. அப்பகுதி மீனவர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை ஆட்சியர் தலைமையில் இன்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தை வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. தங்களுக்கு எழுத்துமூலம் அழைப்பு வரவில்லை என மயிலை அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்துச் சபை கூறிய பின்னர் இந்த மாற்றம் நிகழ்ந்தது.
இடையில், கட்டுமானத்துக்குத் திட்டமிட்ட பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரியத்தின் பழைய குடியிருப்புகளை இடிக்க வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. திட்டத்தை அரசு கைவிடவில்லை என்பதையே இது காட்டுவதாகக் கருதப்படுகிறது.













