நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரப் பகுதிக்கு அருகே ஹெலிபேடில் தரையிறங்க முயன்ற இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விழுந்து நொறுங்கின. இதில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
காத்மாண்டுவிலிருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் உள்ள சோலுகும்பே மாவட்டத்தின் பொரிச்சே ஹெலிபேடில் இது நிகழ்ந்தது. பிஷ்டெயில் ஏர், ஏர் டைனாஸ்டி ஆகிய தனியார் நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் ஒரே நேரத்தில் இறங்க முயன்றபோது அவற்றின் இறக்கைகள் மோதிக்கொண்டன.
பிஷ்டெயில் ஏர் ஹெலிகாப்டரில் இருந்த வசந்த குமார் என்ற இந்தியர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்த ஹெலிகாப்டரின் கேப்டன் பிரஜ்வல், ஏர் டைனாஸ்டியின் கேப்டன் ரவீந்திர பிரஜாபதி ஆகியோர் படுகாயமடைந்து காத்மாண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகின்றனர்.
நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் உள்ளூர் காவல்துறையும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றன. மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளையும் அவசர உதவிப் பொருட்களையும் கொண்டு செல்ல சிறிய ஹெலிகாப்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.












