13 குழந்தைகள் பெற்றும் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள மறுத்து காட்டுக்குள் ஒளிந்து தப்பித்துவந்த பழங்குடியின நபர் ஒருவருக்கு வெற்றிகரமாக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இன்றும் கூட குடும்பக் கட்டுப்பாடு என்ற சொல் பலரிடையே பீதியைக் கிளப்பத்தான் செய்கிறது. குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் ஆண்மை குறைந்துவிடும், முன்னதைப் போல இயல்பாக துணைவியுடன் பாலுறவு வைத்துக்கொள்ளமுடியாது என்று தவறான புரிதல்கள் மக்கள் மத்தியில் பரவிக்கிடக்கின்றன. அப்படி ஒருவருக்கு இருந்த தவறான புரிதல் தான் அவரது மனைவியை பலவீனப்படுத்தி அவருக்கு உடல்ரீதியான புதிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரையடுத்த பர்கூர் மலைப்பகுதியில் வசித்துவரும் தம்பதியர் சின்ன மாதையன் 46 – சாந்தி 42. இந்த தம்பதியருக்கு மொத்தம் 12 குழந்தைகள். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக இவர்களுக்கு 13வது குழந்தை பிறந்துள்ளது. இந்த 13 குழந்தைகளுக்கும் வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு, குழந்தைகள் வீட்டிலேயே பிறந்துள்ளன.
இதைத்தொடர்ந்து சின்ன மாதையன் – சாந்தி தம்பதியருக்கு பிறந்த 13வது குழந்தையைப் பரிசோதிக்க அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர், அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர், தன்னார்வலர்கள் குழு ஆகியோர் அவர்கள் வசிக்கும் ஒன்னகரம் கிராமத்தை வந்தடைந்துள்ளனர். பரிசோதனைக்குப் பிறகு சாந்திக்கு இரத்தசோகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலையில், அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வது இயலாத விஷயம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சின்ன மாதையனுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய முடிவுசெய்யப்பட்ட நிலையில் அவர் அதற்கு பயந்து மறுத்துள்ளார். சுமார் 10 மாதங்களுக்கு முன்னதாகவே மருத்துவர் படை இத்தம்பதியருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய வலியுறுத்தி இவர்களின் கிராமத்திற்கு வருவதும், அதற்கு பயந்து இத்தம்பதி காட்டுக்குள் ஓடிச்சென்று ஒளிந்துகொள்வதுமான சம்பவங்கள் இங்கே நடந்துள்ளன.
இதைத்தொடர்ந்து மாதையனுக்கு குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம் மற்றும் இனியும் குழந்தை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் சாந்தியின் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்ட நிலையில், அவர் அதற்கு சம்மதித்து, அவருக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் நவீன முறையிலான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


























