ஆப்கனில் பெண்களால் இயக்கப்படும் ரேடியோ ஸ்டேஷனில் ரமலான் மாதத்தில் இசை ஒலிபரப்பப்பட்டதாக தாலிபன்களால் அது மூடப்பட்டுள்ளது.
’சடாய் பனாவோன்’ என்ற பெயரில் ஆப்கனில் கடந்த 10 வருடங்களாக ரேடியோ ஸ்டேஷன் ஒன்று இயங்கிவருகிறது. ’பெண்களின் குரல்’ என்ற பொருளைக் கொண்ட இந்த நிலையத்தில் 6 பெண்கள் உட்பட 8 பேர் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்கும் மாதமான புனித ரமலானில் இந்த நிலையத்திலிருந்து பாடல்களும் இசையும் ஒலிபரப்பப்பட்டதாக இந்த நிலையத்தை தாலிபன்கள் மூடியுள்ளனர். இதுகுறித்து அங்குள்ள பதாக்ஷான் மாகாணத்தின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குநர் மொசுதீன் அஹ்மாதி, இந்த நிலையம் விதிகளை மீறி செயல்பட்டதால் மூடப்பட்டதாக தெரிவித்தார். மேலும் அவர், “இந்த நிலையத்தில் இனி இதுபோன்று பாடல்களோ இசையோ ஒலிபரப்பாகாது என்று உறுதியளிக்கப்பட்டால் மீண்டும் இதனை நாங்கள் திறப்போம்” என்று கூறினார்.
ஆனால் இதுபற்றி ரேடியோ நிலையத்தின் தலைவர் நாஜியா சோரோஷ் கூறுகையில், ”நாங்கள் எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை. மேலும் நிலையத்தை மூடும் அவசியமே தற்சமயம் இல்லை. இது எங்களுக்கு எதிராக பின்னப்பட்ட சதி. நாங்கள் இசையை ஒலிபரப்பியதாக தாலிபன்கள் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் எந்த இசையையும் ஒலிபரப்பவில்லை.
உடனடியாக தகவல் மற்றும் கலாச்சாரத் துறை அதிகாரிகள் எங்கள் நிலையத்திற்கு வந்து அதனை மூடிவிட்டனர். நாங்கள் நிலையம் மூடப்படும் காரணம் குறித்து கேட்டும் எங்களுக்கு எந்த கூடுதல் தகவலும் அதிகாரிகளால் அளிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
தாலிபன்கள் ஆப்கனில் ஆட்சியமைத்தது தொடங்கி பல்வேறு ஊடகத் துறையைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் பணியிழந்துள்ளனர். மேலும் அவர்கள் பெண்களுக்கு எதிரான பல திட்டங்களை செயல்படுத்திவருகின்றனர். பெண்கள் பணிக்கு செல்வது, கல்விகற்கச் செல்வது போன்றவற்றிற்கு தடை விதித்து அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இவ்வாறு பெண்களால் நிர்வகிக்கப்படும் ரேடியோ நிலையம் மூடப்பட்டதும், பெண்கள் பணிபுரிவதைத் தடுக்கவே என்று அங்குள்ள பத்திரிகையாளர்களால் குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கு முன்னதாக 1990களில் தாலிபன்கள் ஆட்சியிலிருந்தபோதும் தொலைக்காட்சி சேனல்கள், ரேடியோ நிலையங்கள், பத்திரிகைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


























