கேரளாவில் ஓடும் இரயிலில் பயணி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பிய நபர் உத்தரப்பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் ஆலப்புழா – கண்ணூர் இடையே பயணித்த எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் செய்த பயணி மீது சக பயணி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் தீவைக்கப்பட்ட நபர் மற்றும் தீயிலிருந்து தப்பிக்க இரயிலிலிருந்து குதித்த இருவர் உட்பட 3 பேர் பலியாகினர். மேலும் தீயால் பயணிகள் 9 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தை நிகழ்த்திய குற்றவாளி, பயணிகள் இரயிலை சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்த முயன்ற சமயம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். தொடர்ந்து அவனைப் பிடிக்க சிசிடிவி காட்சிகள் உதவியுடன் அவனது புகைப்பட மாதிரி வரையப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. மேலும் அவனைக் கண்டுபிடிக்க தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்தனர். அவன் தனிப்பட்ட வன்மம் காரணமாக இவ்வாறு நடந்துகொண்டானா? அல்லது ஏதேனும் பயங்கரவாத அமைப்பின் சார்பில் இரயிலை எரிக்க இப்படி செயல்பட்டானா? என்ற விதத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணையும் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், பயணிக்கு தீவைத்துவிட்டு தப்பிய குற்றவாளி உத்தரப்பிரதேசத்தில் காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளான். மேலும் அவனது பெயர் ஷாருக் சைபி என்றும் அவன் நொய்டாவைச் சேர்ந்தவன் என்றும் தெரியவந்துள்ளது. தீவிபத்தால் உயிரிழந்த மூவர் மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஆகியோர் இஸ்லாமியர்கள் என்பதால் ஏதேனும் தனிப்பட்ட பகை காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த தகவல்கள் விசாரணைக்குப் பிறகு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























