அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி சமீபத்தில் சூரியனில் கரோனல் எனப்படும் துளையை கண்டறிந்துள்ளது. இது பூமியை விட 30 மடங்கு அளவில் பெரியது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சூரியனில் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இப்படி ஏதேனும் குறிப்பிடும்படியாக உருவாகும் இந்த நிகழ்வானது மிகவும் பொதுவான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த கரோனல் துளையின் விளைவாக, சூரியக் காற்று இன்று அல்லது நாளை நமது பூமியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக கரோனல் துளைகள் என்பது சூரியனின் மேற்பரப்பில் உள்ள பகுதிகளாகும். இது சூரிய துகள்கள் பிரபஞ்சத்திற்குள் வெளியேற அனுமதிக்கிறது. சூரியனின் சுற்றியுள்ள பகுதிகளுடன் ஒப்பிடும்போது இந்த பகுதிகளில் குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த பிளாஸ்மா அடர்த்தி இருக்கும்.
இதிலிருந்து வெளியேறும் சூரியக் காற்று எனப்படும் சூரியனால் உமிழப்படும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களின் தொகுப்பு, விண்வெளியில் பயணித்து பூமி உட்பட பிற கிரகங்களுடன் தொடர்பு கொள்கிறது. சூரியக் காற்று நமது கிரகத்தை அடையும் போது, அவை பூமியின் காந்தப்புலத்தை பாதிக்கும் புவி காந்த புயல்களை ஏற்படுத்தும். இந்த புயல்கள் அழகான அரோராக்களை அல்லது வடக்கு மற்றும் தெற்கு போன்ற துருவப் பகுதிகளில் ஒளியை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன.
இவ்வாறாக வெளியேறும் சூரியப் புயலினால் ஏற்படும் இந்த அரோராவானது ஒரு நேர்மறையான விளைவுதான் என்றாலும், அது எதிர்மறையான விளைவுகளையும் உருவாக்கலாம். இந்த புவி காந்த புயல்கள் செயற்கைக்கோள்களின் தகவல் தொடர்பு, ஜிபிஎஸ் அமைப்புகள் ஆகியவற்றில் இடையூறுகளை ஏற்படுத்தும். மேலும், சூரியக் காற்றில் இருந்து வெளிப்படும் அதிக கதிர்வீச்சு விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களின் மின்னணுவியலையும் பாதிக்கலாம்.
இதைத்தொடர்ந்து, சூரியப் புயல்கள் பூமியில் எத்தகு தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்பது குறித்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு, சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றி தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலம், நமது உணர்திறன் வாய்ந்த மின்னணு அமைப்புகளையும், விண்வெளியில் விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கமுடியும்.


























