டெல்லியில் தங்களது வீட்டில் கொசுவர்த்தி கொளுத்தி வைத்துவிட்டு தூங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அதனால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
டெல்லியிலுள்ள சாஸ்திரி பூங்கா அருகே உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு தூங்குவதற்கு முன் கொசுவர்த்திச் சுருளை வீட்டிலிருந்தவர்கள் கொளுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் தூங்கிவிட்ட நிலையில், எரிந்துகொண்டிருந்த கொசுவர்த்தி சுருள் மெத்தை மீது விழுந்து தீப்பற்றியுள்ளது.
இதையடுத்து வெளியான புகை மூடிய அறையிலிருந்து வெளியேற இடமில்லாத காரணத்தால் வீட்டைச் சூழ்ந்த நிலையில், தூக்கத்திலேயே 6 பேரும் நச்சுப்புகையைச் சுவாசித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 6 பேரில் 4 ஆண்கள், 1 பெண் மற்றும் 1½ வயது குழந்தை ஆகியோர் அடங்குவர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்தோரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இதுபோன்ற பூச்சிகளைக் கொல்லும் மருந்துகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து உடல்நல ஆலோசகர்களால் விளக்கப்படுவது உண்டு. கொசுவர்த்தி சுருளையோ அல்லது மின்சார பிளக்குகளில் பொறுத்தப்படும் கொசுமருந்துகளையோ மூடிய அறைக்குள் பயன்படுத்தும்போது அப்புகை வெளியேற இடமில்லாமல் அதை மனிதர்கள் சுவாசிக்கும் விபரீதம் ஏற்படுவதால் அவ்வாறு பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதில்லை.
ஆயினும் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் போகும் பட்சத்தில் அதன் நச்சுப்புகை சுவாசிக்கப்பட்டோ அல்லது அதனால் ஏற்படும் தீவிபத்துகள் காரணமாகவோ இவ்வாறான உயிர்பலிகள் நிகழ்ந்துவிடுகின்றன. மூடிய அறைகளுக்குள் இதுபோன்ற பொருட்களின் பயன்பாடு தவிர்க்கப்படுவது நல்லது.


























