பலவகையான உணவுகளை வழங்கி, மண்டபங்களை அலங்கரித்து, பரிசுகள் வழங்கி மகிழ்ந்து ஆடம்பரமான முறை முதல் எளிமையான முறை வரையான எந்த திருமணமாக இருந்தாலும், அது அழியாத கழிவுகளை உருவாக்கி, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழலை தொடர்ந்து சீரழிக்கும். இவ்வாறு, சுற்றுச்சூழல் குறித்த அக்கறையற்ற திருமணங்களால் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு மத்தியில், ஒரு இந்திய ஜோடியான நூபுர் அகர்வால் மற்றும் அஷ்வின் மால்வாடே ஆகியோர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்படியான திருமணங்கள் நடத்திவைப்பது குறித்த தங்களது முயற்சியைத் துவக்கியுள்ளனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த நுபுர் அகர்வாலும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அஷ்வின் மால்வாடேயும் மும்பையில் தூய்மைப் பணியின் போது கடற்கரையில் சந்தித்தனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது, திருமணம் நடத்திவைக்கும் பல Wedding Planners-ஐ அணுகியபோது, திருமணம் எப்படி நடக்கவேண்டும் என்ற இவர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ளும் ஒரு அமைப்பைக் கூட இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில், நுபூரும் அஷ்வினும் தாங்கள் விரும்பிய சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத திருமணத்தை தாங்களே ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர்.
தங்கள் திருமணத்திற்கு தாங்கள் பின்பற்றிய பல்வேறு இயற்கையுடன் இயைந்த நுட்பங்களைப் பற்றி பேசிய நுபுர், தங்களது திருமணத்தில் இயற்கையான பழச்சாறுகளை விருந்தினர்களுக்கு வினியோகித்ததாகவும், உள்ளூர் பூக்களால் தங்கள் இடத்தை அலங்கரித்ததாகவும், பின்னர் அவை உரமாக மாற்ற அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நுபுர் மற்றும் அஷ்வின் தம்பதியினர் தங்கள் திருமண ஆடைகளில் வந்திருந்தோருக்கு ஊக்கமளிக்கும் விதமான வாசகங்களை எம்ப்ராய்டரி செய்திருந்தனர். மேலும் மணமகனின் திருமண ஊர்வலம் நச்சுப் புகையை வெளியிடாத மின்சார வாகனத்தில் நடந்தது. மேலும் திருமணத்தில் மீதமான உணவு பசித்தோருக்கு விநியோகிக்கப்பட்டது; இதனால் திருமணத்திற்குப் பிறகு உணவு வீணாகவில்லை.
தம்பதியினர் தங்கள் விருந்தினர்களை விமானத்தில் செல்வதற்குப் பதிலாக ரயிலில் பயணிக்குமாறு கேட்டுக்கொண்டனர் மற்றும் ஒரு விருந்தினர் ஒரு மரத்தை நடவேண்டியும் அவர்களை அறிவுறுத்தினர். அவர்கள் திருமணத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு, செய்தித்தாள்களில் பரிசுகளை பேக் செய்வது, திருமண தேதி பொறிக்கப்பட்ட ஸ்டீல் கேன்களில் இனிப்புகளை வழங்குவது போன்ற ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கொண்டு வந்தனர்.
இப்படியான சுற்றுச்சூழலுக்கு உகந்த தங்கள் திருமணத்தைத் திட்டமிட்ட பிறகு, நுபுர் – அஷ்வின் தம்பதியினரால் இதை மேலும் முன்னோக்கிக் கொண்டுசெல்லும் பொருட்டு சுயமாக துவங்கப்பட்ட நிறுவனம் தான் ’கிரீன்மைனா’ என்ற தங்கள் சொந்த நிறுவனம். இதன் மூலம் பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திருமணத்தை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பது குறித்த ஆலோசனைகளை அவர்கள் பிறருக்கும் வழங்கிவருகின்றனர்.
நூபுர் மற்றும் அஷ்வின் இப்போது பிறந்தநாள் பார்ட்டிகள், கார்ப்பரேட் நிகழ்வுகள் போன்ற பிற பசுமை நிகழ்வுகளைத் திட்டமிட உதவுகிறார்கள். இவர்களின் Greenmyna.com நிறுவனத்தின் முன்னெடுப்பால், இதுவரை 200க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டதாகவும், சுமார் 8,800 கிலோ கழிவுகளை உரமாக்கியதாகவும், மரங்களை நடுதல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளின் மூலம் 2,450 கிலோ கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
ஒரு திருமண நிகழ்வில் பிளாஸ்டிக் குப்பைகள் உற்பத்திக்கு அலங்காரம், உணவு வழங்கப் பயன்படும் பொருட்கள் உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாக அமைவதாக நுபுர் தெரிவிக்கிறார். நுபுர் – அஷ்வின் தம்பதியின் கழிவு மேலாண்மை நுட்பங்களில் அதிகப்படியான உணவு விநியோகம், உலர்-கழிவு மறுசுழற்சி மற்றும் அவற்றில் உரம் தயாரித்தல், கார்பன் உருவாக்கத்தை அளவிட கார்பன் தணிக்கை கணக்கீடு செய்வது ஆகியவை அடங்கும்.
https://www.instagram.com/greenmyna/?utm_source=ig_embed&ig_rid=8d116591-057f-45e0-965e-2183b6fbd781


























