பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது குறித்து சரியான ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டி உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
2002ம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தின் போது ஏற்பட்ட கலவரம் நாட்டையே உலுக்கியது. மிகப்பெரிய அளவில் பொருட்சேதமும் உயிர்சேதமும் ஏற்பட்ட இந்நிகழ்வில், அகமதாபாத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 19 வயது கர்ப்பிணிப் பெண் கலவரக்காரர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் அவரது 3 வயது குழந்தை உட்பட குடும்பத்தினர் அடித்துக் கொல்லப்பட்டனர்.
மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இக்குற்றச்செயலின் காரணமாக இதில் ஈடுபட்ட 11 பேர் குற்றவாளிகள் என கூறப்பட்டு தண்டனை பெற்றுவந்த நிலையில், அண்மையில் அவர்கள் தண்டனைக் காலத்திற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டது கண்டன்ங்களைப் பெற்றது.
இந்நிலையில், பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலையான குற்றவாளிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த கே.எம்.ஜோசஃப் மற்றும் நாகரத்னா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ”கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதைச் சராசரியான கொலை வழக்குடன் ஒப்பிடுவது சரியா? எப்படி ஆப்பிள் பழத்தை ஆரஞ்சுடன் ஒப்பிட முடியாதோ அதே போல் படுகொலைச் சம்பவங்களை சாதாரண கொலைச் சம்பவங்களுடன் ஒப்பிட முடியாது.
இன்று பில்கிஸ் பானு… நாளை அது நானாகவோ அல்லது நீங்களாகவோ கூட இருக்கலாம். பில்கிஸ் பானு வழக்கில் அரசு 11 குற்றவாளிகளை ஏன் விடுவித்தது என்று தெரியவில்லை. எந்த அடிப்படையில் குற்றவாளிகளுக்கு விடுதலை அளிக்கப்பட்டது என்பதைக் காட்டவில்லையென்றால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இதற்கான சொந்த முடிவை எடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை மே 2ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


























