கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அதிமுக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெறுகிறது. மேலும் இதன் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 20ம் தேதி முடிகிறது. ஏப்ரல் 21ம் தேதி வேட்புமனு பரிசீலனை மற்றும் ஏப்ரல் 24ம் தேதி வேட்புமனுவைத் திரும்பப்பெறும் கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அங்கு ஆட்சியில் உள்ள பாஜக, ஆட்சியைப் பிடிக்கக் காத்திருக்கும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. கருத்துக் கணிப்புகளின் படி இந்த முறை அதிக இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகாவின் புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், ’’அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 10.05.2023 அன்று நடைபெறவுள்ள கர்நாடக மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கர்நாடக மாநில கழக அவைத்தலைவர் அன்பரசன் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதாவது இத்தொகுதியில் பாஜக சார்பில் களம்காணும் வேட்பாளர் முரளி என்பவருக்குப் போட்டியாக அதிமுக வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். கூட்டணி சார்ந்து பாஜகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அது ஒத்துவரவில்லை என்பதால் இவ்வாறு தனித்து அதிமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் சுரேஷ் ரத்தோட் என்பவர் போட்டியிடுவது குறிப்பிட்த்தக்கது.


























