திருடர்களுக்கு சாதாரண தொழில் செய்வோரை விடவும் அதிக திட்டமிடல் அவசியம் என்பார்கள். ஏனெனில் குற்றம் என்பதைத் தாண்டி ஆபத்தான தொழில் என்பதால் கரணம் தப்பினால் மரணம் என்பது போல் தான் ஒவ்வொரு நாளும் அவர்களுக்குக் கடக்கும். எந்த அளவுக்கு திருடர்கள் உஷாராக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு நீண்ட நாட்கள் சிக்கிக்கொள்ளாமல் ஓரளவுக்கு தொழிலை ஓட்டமுடியும். தப்பித்தவறி ஏதேனும் கிறுக்குத் தனமாக செய்துவிட்டால் சோலி முடிந்தது.
அந்த வகையில், ஐடியா இல்லாமல் ஒரே இடத்தில் பலமுறை திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு திருடன் ஒருவன் போலீசில் அகப்பட்டுக்கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிகாகோவின், இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்த போலீசார் கடந்த திங்கள்கிழமை, டிசம்பர் 2022 முதல் ஏப்ரல் வரையிலான சுமார் 5 மாதங்களில் ஒரே இடத்தில் 11 முறை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபரைக் கைதுசெய்துள்ளனர். டான்டே எல்பர்ட் என்ற 36 வயதுடைய அந்நபர் இத்திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிகாகோ காவல்துறை அதிகாரி கூறுகையில், ’’நாங்கள் அவரைக் கைதுசெய்து காவலில் வைத்துள்ளோம். அவர் அந்தக் குறிப்பிட்ட இடத்திலிருந்து வாங்கிய பொருட்களுக்கு எந்த விதமான பணத்தையும் செலுத்தாமல் சென்றார். என்.க்ளார்க் ஸ்ட்ரீர் என்ற பகுதியின் 3200வது ப்ளாக்கில் அமைந்துள்ள ஒரு பொருளங்காடியில் சுமார் 11 முறை அவர் திருடியுள்ளார். மேலும் அதே பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் அவர் இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக புகார் வரவே நாங்கள் அவரைக் கைதுசெய்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
அவர் மீது, 300 டாலருக்கு குறைவான சில்லறைத் திருட்டுப் பொருட்களை ஒன்பது முறையும், 300 டாலருக்கு அதிகமான பொருட்களை 3 முறையும் திருடிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த திருட்டுச் சம்பவங்களில் அவர் யாரையேனும் சேர்த்துக்கொண்டு ஈடுபடுகிறாரா? அல்லது தனியாக இச்செயல்களில் ஈருபடுகிறாரா? என்ற நோக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.


























