இணையத்தில் ஆபத்தான சாகசங்கள் அதன் பயன்பாட்டாளர்களிடையே மிகைத்து வருகின்றன. அந்த நொடியில் அதிக லைக்குகளைப் பெற வேண்டும், இணையத்தில் தனது வீடியோ வைரலாக வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு இவ்வாறு செய்யப்படும் சாகசங்கள் பல நேரங்களில் அதீத ஆபத்தாக அமைந்துவிடுவதுண்டு. அவ்வாறு டிக் செயலியில் விபரீத சாகசத்தில் ஈடுபட்ட 13 வயதுடைய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ஜேக்கப் ஸ்டீவன்ஸ் என்ற 13 வயது சிறுவன் டிக் காட்டில், சளிக்கு உட்கொள்ளப்படும் பெனட்ரில் மாத்திரையை அதிகம் உட்கொண்ட காரணத்தால் உயிரிழந்துள்ளான். டிக் டாக்கில் அடிக்கடி ஏதேனும் சாகசங்கள் டிரெண்டாவது போல், பெனட்ரில் மாத்திரையை யார் அதிகம் உட்கொண்டு மயக்க நிலையை அடைகிறார்கள் என்ற டிரெண்டிங்கின் போது தான், மயக்க நிலைக்கு மாற்றாக ஜேக்கப் தன் உயிரையே இழந்துள்ளான்.
சம்பவத்திற்கு பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜேக்கப் 6 நாட்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருந்துவந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இனி வேறு யாரும் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபட்டு இப்படி சிரமப்படக்கூடாது என்பதற்காக ஜேக்கப் மருத்துவமனையில் இருக்கும் புகைப்பட்த்தை அவரது பெற்றோர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதுபோன்ற டிக் டாக் சேலஞ்சுகள் இது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக 2020ல், 15 வயதுடைய சிறுமி இவ்வாறு மருந்தை அதிகமாக உட்கொண்டு மரணமடைந்த நிலையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அச்சமயம் இதுபோன்று மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீவிர இதயப் பிரச்சனைகள், வலிப்புத்தாக்கங்கள், கோமா மற்றும் இறப்பு உள்ளிட்ட பேரழிவு விளைவுகளைப் பற்றி பெற்றோருக்கு எச்சரிக்கை வெளியிட்டது.
மருந்தளவு வழிகாட்டுதல்படி சளிக்குப் பயன்படுத்தும் பெனட்ரில் மருந்தை 24 மணி நேரத்தில் 6 முறை மட்டுமே எடுத்துக்கொள்ள வலியுறுத்தப்படுகிறது. இந்த அளவு வயதிற்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது. அளவுக்கதிகமான மருந்தை குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தெரியாமல் உட்கொள்வதைத் தடுக்க, மருந்தைப் பூட்டி வைக்குமாறு பெற்றோரை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஊக்குவித்துள்ளது. மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து மருந்துகளை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி அவர்களிடம் பேசவேண்டியும் வலியுறுத்துகிறது.
இதுகுறித்து டிக் டாக்கின் தலைமை செயல் அதிகாரி ஷோ சீ ஷூ கூறுகையில், ’’இளைஞர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நாங்கள் அதிக நேரம் செலவிடுகிறோம். 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு நேரடியாகச் செய்தி அனுப்புவதை நாங்கள் தடைசெய்கிறோம். 18 வயதிற்குட்பட்டவர்களை இயல்பாகவே 60-நிமிடத்திற்கு ஒருமுறை கண்காணித்து வருகிறோம். பதின்ம வயதுக்குறியோருக்கான பாதுகாப்பு தான் எங்கள் நிறுவனத்தின் முதன்மை நோக்கம்’’ என்று தெரிவிக்கிறார்.


























