உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் சீனா இருந்துவரும் நிலையில், சீனாவின் இடத்தை இந்தியா இந்த ஆண்டின் மத்தியில் கைப்பற்றிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தற்சமயம் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறவிருக்கிறது. பல ஆண்டுகளாக சீனா இந்த இடத்தில் நீடித்துவரும் நிலையில், இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்துவந்தது. இந்நிலையில், இந்த ஆண்டின் மத்தியில் இந்தியா முதல் நாடாக வந்துவிடும் என்று UNFPA தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு எனப்படும் UNFPA, உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தான் இந்தியா நிகழ்த்தவிருக்கும் இச்சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி UNFPA வெளியிட்ட 2023ம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை அறிக்கையில், 142.57 கோடி மக்கள் தொகையுடன் சீனா 2வது இடத்திலும், 142.86 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா முதலிடத்திலும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சீனாவை விட இந்தியாவின் மக்கள் தொகை 29 லட்சம் அதிகமாக இருக்கும். மேலும் இந்த எண்ணிக்கை இந்த ஆண்டின் மத்தியில், அதாவது ஜூன் மாதத்திற்கு முன்னதாக எட்டப்படும் என்று தெரிகிறது.
இதற்கு காரணம் சீனாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதும், இந்தியாவில் அதற்கான சட்டங்கள் நடைமுறையில் இல்லாததும் தான் என்று கூறப்படுகிறது.
மேலும் தற்சமயம் உலக மக்கள் தொகை 804 கோடியாக உள்ளது என்றும், இந்தியா மற்றும் சீனாவில் உலக அளவில் மக்கள் தொகை பெருக்க விகிதம் குறைந்துள்ளதாகவும், தற்சமய ஒப்பீட்டின்படி இந்தியாவை விட சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























