அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஜோசப் டிடூரி என்ற பேராசிரியர் 74 நாட்களாக கடல் நீருக்கடியில் வாழ்ந்துவருகிறார். இதனால் கடலுக்கடியில் நீண்ட நாட்கள் வாழ்ந்த முதல் மனிதர் என்ற புதிய உலக சாதனையை இவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்த உலக சாதனையை இரண்டு பேராசிரியர்கள் நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் இருவரும் 73 நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்தனர். தற்போது பேராசிரியர் ஜோசப் இச்சாதனையை முறியடித்துள்ளார். ஜூன் 9ம் தேதி வரை கடலுக்கடியில் தங்கி இச்சாதனையை 100 நாள் சாதனையாக மாற்ற ஜோசப் திட்டமிட்டுள்ளார். இவர் ஒரு சிறிய அறை போன்ற ஒரு அமைப்புக்குள், கடல்நீரின் அதீத அழுத்தத்திற்கிடையே அதற்குள் வாழ்ந்துவருகிறார்.
’புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வமே என்னை இங்கு அழைத்துவந்துள்ளது. என் சாதனையின் முதல் நாளிலிருந்து எனது குறிக்கோள், இனிவரவிருக்கும் தலைமுறைகளை ஊக்குவிப்பது, கடலுக்குக் கீழான வாழ்வைப் பற்றி படிக்கும் ஆராய்ச்சியாளர்களை பேட்டியெடுப்பது மற்றும் கடல்நீர் அழுத்தம் போன்ற தீவிர சூழலில் மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கற்றுக்கொள்வது’ என்று அண்மையில் ஒரு பேட்டியின்போது ஜோசப் கூறியிருந்தார்.
ஜோசப்பின் இந்தப் பணிக்கு, ‘புராஜெக்ட் நெப்டியூன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மருத்துவம் மற்றும் கடல் ஆராய்ச்சியை கல்வியுடன் இணைக்கிறது. இது கடல் வள மேம்பாட்டு அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதீத அழுத்தத்தின்கீழ் நீண்ட காலத்திற்கு மனிதஉடல் இருக்கும்போது அது எப்படி செயல்படுகிறது என்பது இதன்மூலம் கண்காணிக்கப்படுகிறது.
கடலுக்கு அடியில் ஜோசப் இருக்கும் அறை போன்ற அமைப்பிலுள்ள அவரது டிஜிட்டல் ஸ்டுடியோவில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேர்காணல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தரையில் இருக்கும்போது அதிகம் நேசித்த விஷயங்களில் தற்போது எதை மிஸ் செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சூரியன் என்று அவர் பதிலளித்துள்ளார்.


























