”தாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சிருவான் போல இருக்கே!” என்று ஒரு நகைச்சுவைக் காட்சியில் வடிவேலு பேச நாம் கேட்டிருப்போம். தாயின் மீதான பாசத்தில் பிள்ளைகள் அவர்களுக்காக என்னென்னவோ விஷயங்களைச் செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஒருவர் எல்லாவற்றிற்கும் மேலாக தனது தாய்க்கு கோயிலே கட்டிவருகிறார்.
ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஷ்ரவன் குமாரின் தாயார் அனுசுயா தேவி 2008ம் ஆண்டு காலமானார். ஷ்ரவன் கல்வி பயிலும் சமயம் அவருக்கு உறுதுணையாக இருந்து தாய் அனுசுயா நன்றாக கவனித்துக் கொண்டுள்ளார். இதனிடையே, தாய் தன்னை விட்டுச்சென்றது ஷ்ரவனுக்கு ஆறாத ரணமாக இருந்துள்ளது.
இந்நிலையில், படிப்புக்குப் பின்னர் ஹைதராபாத்தில் தொழில் தொடங்கி தொழிலதிபரான ஷரவன், தனது தாயின் நினைவாக சிம்மல்வலசா பகுதியில் ரூ.10 கோடி செலவில் கோயில்கட்டி வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்ட நிலையில், பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இக்கோவிலில் தனது தாயின் 51 அடி சிலையை நிறுவ ஷ்ரவன் திட்டமிட்டுள்ளார்.
அம்மா தேவஸ்தானம் என்று அழைக்கப்படும் இக்கோவில் கட்டும் பணியை தமிழ்நாட்டின் பாண்டித்துரை பகுதியின் கட்டிடக் கலைஞர் பாலகம் சிரஞ்சீவி மற்றும் ஒடிசாவின் சில கட்டிடக் கலைஞர்களிடம் ஷ்ரவன் ஒப்படைத்துள்ளார். இக்கோவிலை மற்ற கோவில்கள் போல் ஆகம விதிகளுக்குட்பட்ட கட்ட ஷ்ரவன் கூறியுள்ளார்.
இந்த கோவிலின் கட்டுமானத்தில் கிருஷ்ணா கற்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சிமெண்டிற்குப் பதிலாக, பழங்கால முறையைப் பயன்படுத்தி கல் கலவையால் கற்கள் இணைக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறான கல் கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் கோயிலின் வலிமை பராமரிக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு கோயில் நிலைத்துநிற்கும். கோவிலின் அஸ்திவாரமாக ஷ்ரவனின் தாயார் அனுசியா தேவியின் 51 அடி உயர சிலை நிறுவப்படவிருக்கிறது.


























