உலகிலேயே மிகவும் பழமையான சிங்கங்களில் ஒன்றான ‘லூன்கிடோ’ என்ற கென்ய சிங்கம், கால்நடை மேய்ப்பவர்களால் ஈட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.
கென்யாவின் புகழ்பெற்ற அம்போசெலி தேசியப் பூங்காவின் புறநகர்ப் பகுதியில் உள்ள கால்நடைத் தொழுவத்தில் வழிதவறிச் சென்ற 19 வயதான் லூன்கிடோ என்ற ஆண் சிங்கம் ’மாசாய் மோரன்ஸ்’ எனப்படும் வேட்டைவீரர்கள் மூலம் ஈட்டியால் கொல்லப்பட்டதாக கென்யா வனவிலங்கு சேவை செய்தித் தொடர்பாளர் பால் ஜினாரோ தெரிவித்தார்.
’இந்த வயதான சிங்கம் சில உடல் பிரச்சனைகளுடன் இருந்தது. சொந்தமாக இரை பெற்றுவந்த இச்சிங்கத்திற்கு தொழுவத்திலிருந்த கால்நடைகள் எளிதான இரையாகக் கிடைத்துவந்தன. பொதுவாக திடகாத்திரமான சிங்கங்கள் வேட்டைக்காக பூங்காவிற்குள்ளிருக்கும் காட்டுப்பகுதிக்குள் செல்லும்’ என்று ஜினாரோ கூறினார்.
பொதுவாக ஆப்பிரிக்க சிங்கங்களின் ஆயுட்காலம் காடுகளில் 18 ஆண்டுகள் வரை இருக்கும் என்ற நிலையில், லூன்கிடோ ஆயுட்காலத்தைத் தாண்டிவாழும் அரிய சிங்கமாகப் பார்க்கப்பட்டது.
கென்யாவில் வனவிலங்குகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதற்கான அறிக்கைகள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. மனிதர்கள் காடுகளில் தங்கள் வாழ்விடத்தையும் வேட்டைக்களத்தையும் விரிவுபடுத்துவது இதற்குக் காரணமாக்க் கூறப்படுகிறது.
நகர விரிவாக்கத்தின் காரணமாக அங்குள்ள சிங்கங்கள் அதிகப்படியாக மனிதர்கள் வாழும் இடங்களுக்குள் உலவுவதும், இதனால் சிங்கம் தாக்கி மனிதர்களும், சில நேரங்களில் மனிதர்களால் சிங்கங்களும் கொல்லப்படுவது தொடர்கதையாகிவருகிறது. கென்யாவில் 2021ல் நடத்தப்பட்ட முதல் தேசிய வனவிலங்குக் கணக்கெடுப்பின்படி, 2,500 சிங்கங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


























