ஹரியானா அரசு, மாநிலத்தின் 2023-24 கலால் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கீழ் கார்ப்பரேட் அலுவலகங்கள் குறைந்த அளவிலான ஆல்கஹால் கொண்ட பீர் மற்றும் ஒயின் போன்ற மதுபானங்களை ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு வழங்க அனுமதிக்கப்படுகிறது.
ஜூன் 12 முதல் ஹரியானாவில் அமலுக்கு வரும் புதிய கலால் கொள்கையின்படி, குறைந்தபட்சம் 5,000 ஊழியர்களைக் கொண்ட, சொந்த அல்லது குத்தகையில் உள்ள ஒரு இலட்சம் சதுர அடி பரப்பளவிலான, தனி வளாகங்களுக்குள்ளான அலுவலகங்களில் பணியாளர்கள் பீர், ஒயின் மற்றும் பிற பானங்களை வைத்திருப்பது மற்றும் உட்கொள்வது அனுமதிக்கப்படுகிறது.
கார்ப்பரேட் அலுவலகங்களில் மதுபான உரிமம் (L-10F உரிமம்) வாங்குவதற்கு, அலுவலகத்தில் கேண்டீன் அல்லது உணவகத்தின் குறைந்தபட்ச பரப்பளவு 2,000-சதுர அடிக்கு குறைவாக இருக்கக்கூடாது என்று விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் அலுவலகங்களுக்கான உரிமம் வழங்குவதற்கான நடைமுறை (L-10F) பார் உரிமங்களுக்குப் பொருந்தும் என்றும், கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையரால் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் நிலையான கட்டணத்தைச் செலுத்தினால் உரிமம் வழங்கப்படும் என்றும் இக்கலால் கொள்கை கூறுகிறது.
L-10F உரிமம், கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையரின் ஒப்புதலுடன், கலெக்டரால் வழங்கப்படும். இது கலெக்டர் (கலால்) சார்பாக மாவட்ட துணை கலால் மற்றும் வரித்துறை ஆணையரால் புதுப்பிக்கப்படும். உரிமக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.3 லட்சம் பாதுகாப்புத் தொகையை உரிமதாரர் செலுத்த வேண்டும்.
இந்த புதிய கொள்கையில், 2023-24 ஆம் ஆண்டில் மாநிலத்தில் அதிகபட்ச சில்லறை மதுபான விற்பனைகளின் வரம்பு 2,500 லிருந்து 2,400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2022-23ல் 2,600ல் இருந்து 2,500 ஆக இது குறைக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு மாநிலம் கார்ப்பரேட் அலுவலகங்களில் மதுபானங்களை வழங்க அனுமதிப்பது இதுவே முதல்முறை.


























