சண்டிகரைச் சேர்ந்த மாணவி ஒருவர் 3 வயதில் ஆசிட் வீச்சால் பார்வையிழந்த நிலையில், 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்து அனைவரையும் நெகிழவைத்துள்ளார். தன்னம்பிக்கையற்றவர்களுக்கு ஒளிதரும் இந்த பார்வையற்ற மாணவி யார்
ஹரியானாவின் ஹிஸ்ஸா பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் காஃபி என்ற 15 வயது மாணவி. இவர் தனது 3 வயதில் தான் வசிக்கும் பகுதியில் நண்பர்களுடன் ஹோலி பண்டிகையின் போது விளையாடிக் கொண்டிருந்த சமயம், மர்மநபர்கள் 3 பேர் அவரது முகத்தில் ஆசிட் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இதில் முகத்தில் பலத்த காயமடைந்த காஃபிக்கு இரண்டு கண்பார்வைகளும் பறிபோயுள்ளன.
கிட்டத்தட்ட அதற்கடுத்த 6 ஆண்டுகளுக்கு காஃபியின் பெற்றோர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு காஃபியை அழைத்துச் சென்றும் அவருக்கு கண்பார்யையைப் பெறமுடியவில்லை. இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், காஃபியின் தந்தை அவர்களுக்கு கடுமையான தண்டனை வேண்டும் என்று மேல்முறையீடு செய்து அவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையிலுள்ளது.
இதைத்தொடர்ந்து சண்டிகருக்கு காஃபியின் குடும்பம் குடிபெயர்ந்து அங்குள்ள பார்வையற்றோருக்கான கல்வி நிலையத்தில் காஃபி சேர்ந்தார். தனது குறைபாடு ஒரு பொருட்டேயில்லை என்பதைக் கருத்தில்கொண்டு தீவிரமாகப் படித்த காஃபி, அண்மையில் நடந்துமுடிந்த சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் 95.20% மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகி தனக்கு துணை நின்ற பெற்றோரைப் பெருமைப்படுத்துவேன் என்று காஃபி தெரிவித்தார். ஒருவேளை ஐஏஎஸ் அதிகாரியாகும் வாய்ப்பு கிடைக்காவிடில் நிச்சயம் ஆசிரியர் ஆவேன் என்று காஃபி உறுதியளிக்கிறார்.


























