AI-ன் God Father என்று போற்றப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் செயற்கை நுண்ணறிவு(AI) வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து கவலை தெரிவித்து, கூகுளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். AI சாட்போட்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் இவர், அதன் சில ஆபத்துகளை மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என்று விவரிக்கிறார். AI-ன் சாட்போட்கள் பொது அறிவு மற்றும் பகுத்தறிவு அடிப்படையில் விரைவில் மனித நுண்ணறிவை மிஞ்சும் என்றும் அவர் கவலை தெரிவிக்கிறார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் நுண்ணறிவு வகை மனித நுண்ணறிவிலிருந்து மிகவும் வேறுபட்டது என்று விளக்கும் ஹிண்டன், அதன் டிஜிட்டல் அமைப்புகள் ஒரே அளவிலான எடையின் பல நகல்களைக் கொண்டுள்ளதாகவும், அவை தனித்தனியாகக் கற்றுக் கொள்ளவும், அதே சமயம் உடனடியாக அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிப்பதாகவும், இது ஆபத்தாக முடியலாம் என்றும் தெரிவிக்கிறார். இதனால் கூகுளை விமர்சிக்க விரும்பவில்லை என்றும், 75 வயதில் ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஹிண்டனின் ராஜினாமாவிற்கு பதிலளிக்கும் விதமாக, கூகுளின் தலைமை விஞ்ஞானி ஜெஃப் டீன், தொழில்நுட்ப வல்லுனர்கள் செயற்கை நுண்ணறிவுக்கான பொறுப்பான அணுகுமுறையில் உறுதியாக இருப்பதாகவும், தைரியமாக புதுமைகளை உருவாக்கும்போது வளர்ந்து வரும் அபாயங்களைப் புரிந்துகொள்ள தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.
ஹிண்டனின் AI மீதான கவலை, அதன் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டுகின்றன. இது பல தொழில்களை மாற்றும் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


























