இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்ள சட்ட அங்கீகாரம் இன்னும் அளிக்கப்படாத நிலையில், ஆங்காங்கே ஓரினச்சேர்க்கை திருமணங்கள் நடந்தவண்ணம் தான் உள்ளன. தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது தொடர்பான மனுக்களின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்துமுடிந்துள்ள நிலையில், தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், ’அதுவரைக்கும்லாம் வெயிட் பண்ண முடியாது!’ என்ற மோடில் தன்பாலின இணையர் இருவர் தற்சமயம் திருமணத்திற்கு தயாராகியுள்ளனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் தன்பாலினஈர்ப்பாளர்கள் இருவருக்கு கவுஹாத்தியில் உள்ள கோவிலில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்துள்ளது. அம்மாநிலத்தின் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள நாகபெராவைச் சேர்ந்த எலிசா வாஹித் மற்றும் கவுஹாத்தியின் ஹெங்கேராபரி பகுதியில் வசிக்கும் மனிஷா ரபா ஆகிய இரண்டு பெண்கள் எளிமையான முறையில் நிச்சயதார்த்த விழாவில் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
அசாமின் நகப்பெரா பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றும் 23 வயதான எலிசாவுக்கு 25 வயதான மனிஷா 5 வருடங்களுக்கு முன்னதாக நண்பராக அறிமுகமாகியுள்ளார். முதலில் நண்பர்களாக தொடர்ந்தாலும் படிப்படியாக தன்பாலின ஈர்ப்பாளர்களாக உணர்ந்த இருவரும் காதலிக்கத் துவங்கியுள்ளனர். முதலில் எலிசா, மனிஷாவிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார்.
தங்கள் காதல் மற்றும் திருமண திட்டம் குறித்து இருவரும் வீட்டாருக்குத் தெரியப்படுத்திய நிலையில், இரு வீட்டாரும் இது தவறு என்று கூறி சம்மதிக்க மறுத்துள்ளனர். பின் மனிஷாவின் வீட்டில் மட்டும் இதற்கு பச்சை கொடி காட்டியுள்ளனர். இதையடுத்து இவர்களின் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்துமுடிந்துள்ளது.
இந்த தன்பாலின ஜோடி ஒன்றரை வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். தன்னை ஒரு நாள் நிச்சயம் வீட்டார் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வர் என்று எலிசா நம்பிக்கையாக கூறுகிறார்.


























