கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்துமுடிந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி முடிவுகள் காலையிலிருந்து வெளியாகத் துவங்கின. இதில் தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்துவந்த நிலையில், பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக ஆட்சியிலிருந்த பாஜக இந்துத்துவ கருத்துக்களை கர்நாடக மக்கள் மீது வலிய திணித்தது, கட்டட வேலைகளில் 40% கமிஷன் பெற்று ஊழலில் ஈடுபட்டது, இஸ்லாமிய வெறுப்பு செயல்களான ஹிஜாப் தடை, இடஒதுக்கீடு மாற்றம் உள்ளிட்டவை பாஜக தோல்வியுற்றதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி முன்னெடுத்த பாரத் ஜோடோ யாத்ரா கர்நாடகத்தில் காங்கிரசின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யாவை முதல்வராக அமர்த்தலாமா? அல்லது வேறுயாரையேனும் அமரவைக்கலாமா? என்று காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரசிற்கு இந்தியாவின் பாஜக ஆளாத பிற மாநிலங்களின் முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
காங்கிரசின் வெற்றி குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ’கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது.
பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் வெற்றி குறித்து, ’மாற்றத்திற்கு ஆதரவாக தீர்க்கமான தீர்ப்பை வழங்கிய கர்நாடக மக்களுக்கு எனது வணக்கங்கள்! முரட்டுத்தனமான எதேச்சதிகார மற்றும் பெரும்பான்மை அரசியல் ஒழிந்தது! பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக சக்திகள் வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் விரும்பும் போது, ஆதிக்கம் செலுத்தும் எந்த மையமும் அவர்களின் விருப்பத்தை அடக்கிவிட முடியாது: அதுதான் நீதி மற்றும் நாளைய பாடம்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், ’ராகுல் காந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! காந்திஜியைப் போலவே, நீங்கள் மக்களின் இதயங்களுக்குள் நுழைந்தீர்கள், அவரைப் போலவே நீங்கள் உங்கள் மென்மையான வழியில் உலகின் சக்திகளை – அன்புடனும் பணிவுடனும் அசைக்க முடியும் என்பதை நிரூபித்தீர்கள்.
பிரிவினையை நிராகரிக்க கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக உங்கலுக்கு பதிலளித்துள்ளனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றிபெற்ற விதத்திற்கும் பாராட்டுக்கள்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், ’தென்னிந்திய மக்கள் பாஜவைப் புறக்கணித்துள்ளனர்’ என்றும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ’ஜம்மு காஷ்மீரில் எந்த நேரத்திலும் சட்டமன்றத் தேர்தலை அனுமதிக்கும் தைரியம் இப்போது பாஜகவுக்கு இருக்காது’ என்றும் காங்கிரஸ் வெற்றி குறித்து கூறியுள்ளார். தொடர்ந்து பல்வேறு மாநில முதல்வர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் காங்கிரசிற்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.


























