சிக்கிமில் உள்ள பழங்குடி சமூகங்களின் மக்கள்தொகையை அதிகரிக்க, மாநில அரசு இரண்டு அல்லது மூன்று குழந்தைகளைக் கொண்ட தனது ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் முன்பணம் மற்றும் கூடுதல் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது.
சிக்கிம் பாடச் சான்றிதழ்/அடையாளச் சான்றிதழை வைத்திருக்கும் சிக்கிம் மாநில அரசு ஊழியர்கள், இரண்டு குழந்தைகளுக்கான இந்த ஊதிய உயர்வைப் பெறுவார்கள் என்று பணியாளர் துறைச்செயலர் ரின்சிங் செவாங் பூட்டியா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், 2023 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்ட ஊழியர்கள் மட்டுமே இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள் என்றும் பூட்டியா கூறினார்.
இமயமலை பகுதியிலுள்ள உள்ளூர் பழங்குடியின பூர்வகுடிகளான லெப்சா, பாட்டியா மற்றும் நேபாள சமூகங்களின் மக்கள்தொகை குறைவைக் கருத்தில் கொண்டு, அம்மக்களிடையே உள்ள குறைந்த கருவுறுதல் விகிதத்தை சமாளிக்க, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் உறுதியளித்திருந்த நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு, இந்த நிதிச்சலுகை வழங்கும் திட்டம் வந்துள்ளது.
இதுகுறித்து, ‘’உள்ளூர் பழங்குடி மக்களிடையே குறைவான கருவுறுதல் விகிதம் சிக்கிமில் தீவிர கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இந்த செயல்முறையை மாற்றியமைக்க நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்” என்று அம்மாநிலத்திலுள்ள காங்டாக்கில் நடந்த ஒரு நிகழ்வில் முதல்வர் தமாங் தெரிவித்திருந்தார்.
சிக்கிம் இந்தியாவின் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உள்ளது. இங்கு சுமார் ஏழு லட்சம் மக்கள் உள்ளனர். மேலும் இந்தியாவிலேயே மிகக்குறைவான அளவாக, சிக்கிம் மாநிலத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 1.1ஆக உள்ளது.


























