அமெரிக்காவில் தனது வீட்டிற்குச் சொந்தமான இடத்தில் பக்கத்துவீட்டுச் சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்ததால் கோபம் கொண்ட முதியவர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் லூசியானா பகுதியில் வசித்துவருபவர் 58 வயதான டேவிட் டாய்ல். சம்பவத்தன்று அண்டை வீட்டைச் சேர்ந்த சில குழந்தைகள் அவரது வீட்டிற்கு வெளியே கண்ணாமூச்சி விளையாடியுள்ளனர். அப்போது, ஏதோ நிழல் போன்ற உருவம் தனது வீட்டிற்கு வெளியே இருப்பதைக் கண்டதாகவும், இவர் வருவதைப் பார்த்து அது ஓடுவது போன்றும் உணர்ந்த டேவிட் கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் குண்டடிபட்ட 14 வயது சிறுமி உயிரிழந்தார்.
இதுபற்றிய விசாரணையில் தன்னை தாக்க யாரோ வெளியிலிருந்து வருவதுபோன்று உணர்ந்ததாலேயே தன்னை தற்காத்துக்கொள்ள இவ்வாறு துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக டேவிட் தெரிவித்துள்ளார். இதையடுத்து, டேவிட் மீது துப்பாக்கி வைத்திருந்தது, துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் தொடர் இறப்புகள் நிகழ்வது வாடிக்கையாகிவருகிறது. முன்னதாக பார்க்கிங்கில் நின்றிருந்த காரை தவறுதலாக தன்னுடைய கார் என்று ஒருவர் நினைத்து ஏறியதால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு பெண் ஒருவர், தவறுதலான பாதையில் தன்னுடைய காரை இயக்கியதால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


























