இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அத்திவாசிய பொருட்களின் விலை மலையளவு உயர்ந்து அம்மக்களை ரத்தக்கண்ணீர் சிந்தவைத்து வருகிறது.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீளமுடியாமல் தவித்துவருகிறது. அரசின் நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க பொதுமக்கள் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமிய நாடான பாகிஸ்தான், கொண்டாடவேண்டிய இந்த ரமலான் மாதத்திலும் கொண்டாட்டங்களின்றி களையிழந்து காணப்படுகிறது.
பொதுவாக ரமலான் மாதத்தில் காலை சூரிய உதயத்திற்கு முன் சாப்பிட்டு, மீண்டும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தான் இஸ்லாமியர்கள் உணவு சாப்பிடுவர். நோன்பு நோற்கும் சமயமும், அதை முடிக்கும் சமயமும் அந்தந்தக் குடும்பத்தின் வசதிக்கேற்ப பழங்கள், காய்கறிகள், குளிர்பானங்கள் கொண்டு அவை கடைபிடிக்கப்படும். வழக்கமாக உண்ணும் உணவைக் காட்டிலும் குறைவான உணவே இஸ்லாமியர்களால் இம்மாதத்தில் அருந்தப்படும் என்றாலும், அவற்றைக் கூட வாங்கமுடியாத அளவிற்கு விலை அதிகரித்துள்ளது அந்நாட்டு மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கிலோ எலுமிச்சையின் விலை அங்கு ரூ.800-ஆக உள்ளது. மேலும் ஒரு கிலோ பூண்டு ரூ.640-க்கு விற்கப்படுகிறது. ரம்ஜானில் நோன்பு முடிக்கும் சமயம் இஸ்லாமிய மக்களால் பழங்கள் உண்ணப்படுவதால் அவற்றின் விலையில் கடும் ஏற்றம் காணப்படுகிறது. ரம்ஜானுக்கு முன்னதாக கிலோ ரூ.70க்கு விற்பனையாகிவந்த தர்பூசணிப் பழத்தின் விலை தற்சமயம் 250-ஆக உள்ளது. அதே போல் டஜன் ரூ.100-ஆக இருந்த வாழைப்பழம், டஜன் ரூ.250 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பாகிஸ்தானில் வெங்காயத்தின் விலை தற்மயம் 228% உயர்ந்துள்ளதாகவும், கோதுமை மாவின் விலை 120% உயர்ந்துள்ளதாகவும், தேயிலையின் விலை 94% உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே போல் எரிபொருட்களில் டீசல் விலை 102%-ம், பெட்ரோல் விலை 81%-ம், முட்டை விலை 79%-ம் அதிகரித்து கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.


























