பணத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி அதிக விந்து தானத்தில் ஈடுபட்ட கொடையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் ஹாக் பகுதியைச் சேர்ந்தவர் ஜொனாதன் ஜேக்கப் மெய்ஜர். இசைக்கலைஞரான இவர் விந்து தானம் செய்யும் கொடையாளராகவும் இருந்துவந்துள்ளார். தான் வசிக்கும் நெதர்லாந்து உட்பல பல நாடுகளுக்கும் தனது விந்தை இவர் தானமாக அளித்துள்ளார்.
நெதர்லாந்தின் விதிமுறைகள்படி விந்து தானம் செய்பவர்கள் அதிகபட்சமாக 25 முறை தானம் செய்யலாம் அல்லது 12 பெண்களை கருவுறச்செய்யலாம். இது, ஒருவேளை விந்து தானம் செய்யப்பட்டு வளரும் குழந்தைகள் தாங்கள் ஒரு தந்தையின் விந்தில் பிறந்தவர்கள் என்பதை அறியாமல் திருமண பந்தத்தில் ஈடுபடுவதையும், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களைத் தடுக்கவும் வகுக்கப்பட்ட விதியாகும்.
தான் வசித்துவரும் பகுதியைத் தாண்டி உக்ரைன், டென்மார்க் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அவர் தொடர்ந்து எல்லை கடந்த விந்துதானத்தை செய்துவந்துள்ளார். ஏற்கனவே 2017ம் ஆண்டு அவர் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி சுமார் 102 குழந்தைகளுக்கு தந்தையாகி இருந்ததால் இனி இவர் விந்து தானத்தில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டிருந்த்து. அதையும் மீறி அவர் இச்செயலில் ஈடுபட்ட நிலையில், அவர் மீது டச்சு டோனர்கைண்ட் என்ற அறக்கட்டளை சிவில் வழக்கு ஒன்றைத் தொடந்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த அந்த அறக்கட்டளையின் தலைவர் டைஸ் வான் டெர் மீர், ”அவர் இணையம் மூலம் உலகளாவிய தொடர்பைக் கொண்டுள்ளார் மற்றும் அவர் பெரிய, சர்வதேச விந்தணு வங்கிகளுடன் வணிகம் செய்கிறார். அவர் விஷயத்தில் அரசாங்கம் எதுவும் செய்யாததால் நாங்கள் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று கூறுகிறார்.
இவரால் 2018ம் ஆண்டு கருவுற்ற பெண் ஒருவர் கூறுகையில், ’’இவர் ஏற்கனவே சுமார் 100 குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார் என்று தெரிந்திருந்தால் இவர் விந்தை நான் தானமாகப் பெற்றிருக்கமாட்டேன். இதனால் என் குழந்தைக்கு ஏற்படவிருக்கும் விளைவுகளைப் பற்றி நான் நினைக்கும் போது எனக்கு அடிவயிறு கலங்குகிறது. என் குழந்தையைப் பாதுகாக்க நீதிமன்றத்திற்குச் செல்வதே ஒரே வழி’ என்று கூறுகிறார்.
இவருக்கு எதிராக வழக்கு தொடந்த டோனர்கைண்ட் அறைக்கட்டளை சார்பு வழக்கறிஞர் கூறுகையில், ’’அவர் விந்து தானம் செய்வதை நிறுத்தக்கூறி பலமுறை அவரிடம் நாங்களும், சில பெண்களும் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் தொடர்ந்து அதை நிறுத்தாமல் செய்துகொண்டே இருக்கவும் சட்ட ரீதியாக இதை அணுக முடிவுசெய்துள்ளோம்’’ என்று கூறுகிறார்.
இதுமட்டுமில்லாமல் வேறு பெயர்கள் மூலமாகவும், தானம் கேட்பவர்களைக் கவரும் விதமாக தனது நடை, உடை, பேச்சுகளை கவர்ச்சிகரமாக அமைத்தும் அவர் தொடர் விந்து தானக்களில் ஈடுபட்டுள்ளார். இவரால் விந்து தானம் பெறப்பட்ட பெண்களின் கூற்றுபடி இந்த விபரங்கள் தெரியவந்துள்ளது.
அதிக பணம் சம்பாதிக்கும் நோக்குடன் மெய்ஜர் இவ்வாறு விதிகளை மீறி செயல்பட்டுள்ளது அவரை கடும் நெருக்கடியில் சிக்கவைத்துள்ளது. ஒருமுறை தனது விந்து தானம் குறித்து, ’’உலகம் முழுவதும் என்னுடைய குழந்தைகள் மட்டுமே இருக்கவேண்டி நான் ஆசைபடுகிறேன்’’ என்று மெய்ஜர் முன்னதாக பேசியது குறிப்பிடத்தக்கது.


























