இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பைத் தொடர் போட்டிகள் இன்றிலிருந்து ஆரம்பமாகவிருக்கின்றன. இத்தொடரில் நாளை இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவிருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டிகள் எல்லாமே பரபரப்பானவையாகவே இருக்கும்.
உலகக் கோப்பைப் போட்டிகளில் (50 ஓவர் மற்றும் 20 ஓவர்) இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன்பு 12 முறை மோதியதுள்ளன. அவற்றில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணியே வென்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 7 முறையும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 5 முறையும் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்துள்ளது. இந்நிலையில் சூப்பர் 12 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதவிருக்கின்றன.
நாளை நடைபெறவிருக்கும் போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.

பாபர் அஸாம் (கேப்டன்)
ஆசிப் அலி
ஃபகார் ஸமான்
ஹைதர் அலி
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்)
இமாத் வாசிம்
முகமது ஹபீஸ்
ஷதாப் கான்
சோயிப் மாலிக்
ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி
ஷாஹீன் ஷா அப்ரிடி
இந்த 12 பேர் அடங்கிய அணியிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டு இறுதியாக 11 பேர் விளையாடும் அணி நாளை அறிவிக்கப்படவிருக்கிறது. எப்போதும் போலவே இந்தியா – பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டியைக் காண ரசிகர்கள் பேராவலுடன் இருக்கிறார்கள். உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியாவை இம்முறையேனும் வீழ்த்தும் நோக்கோடு பாகிஸ்தான் களமிறங்கவிருக்கிறது.
























