இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது” என்பது போன்று சூர்யா பேசும் வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.
கூட்டத்தில் ஒருத்தன் திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல் சூர்யாவை வைத்து உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவரும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராளியுமான அம்பேத்கரின் கொள்கைகளை போற்றும் விதத்தில் எழுப்பப்படும் முழக்கச் சொல்லான ஜெய்பீம் என்கிற தலைப்பே படத்துக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இத்திரைப்படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது.

பழங்குடி மக்களுக்கு எதிரான ஓர் ஒடுக்குமுறைக்கு ஆதரவாகக் களம் இறங்கும் வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். போலிஸ் கதாப்பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், பழங்குடிகளாக மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான படங்கள் தற்போது தொடர்ச்சியாக வந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இத்திரைப்படமும் வெற்றிப்படமாக அமையும் என்கிற நம்பிக்கையை ட்ரெய்லர் ஏற்படுத்தியிருக்கிறது.
























