கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களில் ஆரம்பித்து, தொடர்ந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கியது முதல் 9 மாதங்களில் இதுவரை 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. அதிக பேருக்கு தடுப்பூசி போட வசதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு வந்தது. மது குடிப்பவர்களும், அசைவம் உண்போரும் ஞாயிற்றுக் கிழமைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயங்குகிறார்கள் என்றும், இதனால் 57 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதற்காக தமிழக அரசு இந்த வாரம் முதல் தடுப்பூசி முகாம்களை சனிக்கிழமை அன்று முன்கூட்டி வைத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரம் பேரும், 3-வது முகாமில் 24 லட்சத்து 85 ஆயிரம் பேரும், 4-வது முகாமில் 17 லட்சத்து 19 ஆயிரம் பேரும், 5-வது முகாமில் 22 லட்சத்து 85 ஆயிரம் பேரும் என மொத்தம் 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் பேர் இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பயன்பெற்று உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 6-வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் இந்த முகாமில், 2-வது தவணை தடுப்பூசி போடும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். கையிருப்பில் இருந்த 66 லட்சம் கொரோனா தடுப்பூசிகள், இந்த மெகா தடுப்பூசி முகாமுக்காக மாவட்ட வாரியாகp பிரித்து அனுப்பப்பட்டு இருக்கிறது.
























