தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு தமிழகம் முழுவதும் 5 கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாடு அரசு, மக்கள் நல்வாழ்வுத்துறையால் நடத்தப்பட்டன.
இந்நிலையில், அடுத்து 6-வது கட்டமாக மாநிலம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இருவகையான தடுப்பூசிகளையும் முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் 2-வது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் அருகில் உள்ள முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக மது குடிப்பவர்கள், அசைவம் உண்பவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயங்குவதாலும், இதனால் 57 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளாமல் இருப்பதாலும் இந்த 6-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் ஒரு நாள் முன்பாகச் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
























