குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தேனி மாவட்டம் கொட்டக்குடி ஆற்றில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சேலம் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், சிவதாபுரம் பகுதியில் எம்.ஜி.ஆர். நகர், இந்திரா நகர், பனங்காடு உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளிலும் நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியிலும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனிடையே, ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால், வசிஷ்ட நதி அணை நிரம்பியுள்ளது. இதையடுத்து, நிரம்பி வழியும் நீரில் குளித்தும், செல்ஃபி எடுத்தும் மக்கள் மகிழ்ந்து வருகின்றனர்.
தருமபுரியில் பாப்பிரெட்டிப்படடி, பொம்மிடி, பூதநத்தம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும், பல இடங்களில் மழை நீருடன், சாக்கடையும் கலந்து சாலைகளில் தேங்கி நின்றதால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர்.
இந்த ஆண்டு பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும் ஆந்திராவில் இருந்து நீர் வரத்தாலும் பருவமழைக்கு முன்பே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்துடன், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும்பாலான ஏரிகளும் நிரம்பி வருகின்றன. அதில் ஒன்றான காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இந்நிலையில், ஏரியை பார்வையிட்டார், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன்.
இந்நிலையில், குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரளா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
























